பயங்கரவாத சட்டத்தின் பாரதூரம் அறிந்தும் நாம் பாடம் கற்கவில்லை
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டபோது தென்னிலங்கை பெரும்பான்மையின மக்கள் அமைதிகாத்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் ஒருவர், அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைக்கு தடுக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கங்கள் முன்னெடுத்த அடக்குமுறைகளின் பாதிப்பை உணர்ந்து தென்னிலங்கை மக்கள் அதிலிருந்து இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற மரண ஆணையின் ஆட்சி நடக்கும் ஒரு சமூகத்தில் அடக்குமுறைக்கு எதிராக நிற்போம் என்ற தொனிப்பொருளிலான கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் 80 களில் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொலை செய்ய இந்த சட்டத்தை பயன்படுத்தினார்கள். 80 களின் பின்னர் 30 வருடங்களைக் கடந்து நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். கடந்த காலத்தில் செய்ய முடியாமல் போனதை இன்றும் செய்ய முடியாதுள்ளோம். அது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. போராட்டங்களின் போது தொழிற்சங்கங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனினும் அதிலிருந்து நாம் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. மாணவர் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன எனினும் அதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. எனினும் இன்று அதற்கு எதிராக செயற்பட வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்படுகையில் நாம் “இது உங்களுக்கே நடக்கிறது” என அமைதியாக இருந்தோம். எமக்கு ஏற்படும்வரை அதன் பாதிப்பை உணரவில்லை. இதன் ஆபத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் இந்த அடக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். என்றார்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எவ்வித அடிப்படையும் இன்றி பல குற்றச்சாட்டுக்களின் கீழ் தனித்தனியே பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.