‘கோட்டா கோ கம போராட்டத்தின் இரண்டாம் அலை வெகுதொலைவில் இல்லை’

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள் தொடரும் பட்சத்தில் கோட்டா கோ கம போராட்டத்தின் இரண்டாம் அலை ஆரம்பமாவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லையென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சமூக மற்றும் சமாதான நிலையத்தின் தலைவர் அருட்தந்தை ரொஹான் சில்வா பொது மக்கள் தாம் விரும்பாத ஒரு முறைமைக்கு எதிராகவே போராட்டங்களை முன்னெடுத்ததாகவும், அது தொடரும் பட்சத்தில் மக்கள் பொறுமைகாக்கமாட்டார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தயவு செய்து நீங்கள் இந்த அடக்குமுறையை நிறுத்துங்கள். இது போதும். போராட்டக்காரர்களை தீவிரவாத முத்திரைக் குத்தி கைது செய்வார்கள் எனின், இந்த நாட்டின் பாதிக்கு மேற்பட்ட மக்களை கைது செய்ய வேண்டும். ஆகவே இந்த தீவிரவாத முத்திரையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அடக்குமுறை மற்றும் சித்திரவதைகள் நிறுத்தப்பட வேண்டும். இதனை நிறுத்துங்கள் என பலரும் எழுப்பும் குரல்களுக்கு செவி சாயுங்கள். அவ்வாறு இல்லாவிடின் இரண்டாவது அலை ஆரம்பமாவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம். இந்த நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றையே எதிர்பார்த்தனர். பழைய விடயங்கள் அவ்வாறே மேலும் பலமாக பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு தொடர்ந்து பயணிக்க முடியாது. மக்களை மீண்டும் ஏமாற்ற முடியாது.  மக்கள் உணர்வுடனும், பொறுப்புடனும் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அதனை மறந்துவிட வேண்டாம். மக்கள் தமக்கு விருப்பமில்லை எனக் கூறும் ஒரு முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல  ஆட்சியாளர்கள் முயல்வார்கள் எனின், அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள். என்றார்.

நாட்டில் மிகப்பெரிய மக்கள்  போராட்டம் ஒன்று கடந்தகாலத்தில் ஏன் முன்னெடுக்கப்பட்டது என்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மறந்துபோயுள்ளதாகவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காமையால் நாட்டின் தலைவர் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வேண்டிய நிலைய ஏற்பட்ட விடயத்தையும் அருட்தந்தை இதன்போது ஞாபகப்படுத்தினார்.