தாந்திரீக யோக நிலையங்கள் பாரிஸில் முற்றுகை! ருமேனியக் குரு உட்பட 41 பேர் கைது!!
கடத்தல், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை அடுத்து பொலீஸ் அதிரடிப் பாய்ச்சல்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸிலும் புறப் பிராந்தியங்களிலும் இயங்கிவந்த சர்வதேச ஆத்மன் யோகா சம்மேளனத்தின் (Atman yoga federation) தாந்திரீக யோகக் கலைப் பயிற்சி நிலையங்கள் மீது இன்று அதிகாலை பொலீஸார் திடீரெனப் பாய்ந்தனர் .
இதன்போது தாந்திரீக யோகக் கலை ஆன்மீக குருவாகிய ருமேனியா நாட்டைச் சேர்ந்த கிறிகோரியன் பிவோலாரு (Gregorian Bivolaru) உட்பட அவரது சீஷ்யர்கள் அடங்கிய 41 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
175 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய பொலீஸ் குழு ஒன்று இந்த அதிரடித் தேடுதலை நடத்தியது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் (Paris) , சீன்-ஏ-மான் (Seine-et-Marne) , வல்-து-மான் (Val-de-Marne) ஆகிய பகுதிகளிலும் நாட்டின் Alpes-Maritimes பிராந்தியத்திலும் இன்று காலை சமகாலத்தில் ஆத்மன் யோகா வலைப்பின்னல் மையங்களில் பெருமெடுப்பிலான முற்றுகைகள் இடம்பெற்றுள்ளன. 71 வயதான குரு கிறிகோரியன் பாரிஸின் புற நகராகிய இவ்றி-சூ – சீனில் (Ivry-sur-Seine) உள்ள ஒரு வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.
தனது யோகா அமைப்பைப் பின்பற்றுகின்ற பெண்களைப் பாலியல் ரீதியாகக் கிளர்ச்சியடையச் செய்து சுரண்டுவதற்குப் பயிற்றுவித்து வந்தார் என்று அவர் மீதும் அவரைச் சார்ந்தவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பெண் கடத்தல்கள் தொடர்பாக ருமேனிய நாட்டுக் குரு ஏற்கனவே சர்வதேச பொலீஸாரின் கண்காணிப்பில் சிக்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
ருமேனியாவிலும் அவர் மீது சிறுவர் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தன்னைப் பின்பற்றுகின்ற பெண்களை உடல் ரீதியான உறவுக்குச் சம்மதிக்கச் செய்த பிறகே தாந்திரீக யோகாக் கலையைப் பயிற்றுவித்து வந்தார் என்று பாதிக்கப்பட்ட பெண்களால் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மிஸா (Misa) எனப்படும் ருமேனிய யோகக் கலையே வெளிநாடுகளில் ஆத்மன் யோகா சம்மேளனம் என்ற பெயரில் விரிவடைந்தது. சர்வதேச யோகக் கலை சம்மேளனமும் ஐரோப்பிய யோகக் கலைக் கூட்டமைப்பும் ஆத்மன் யோகக் கலை சம்மேளனத்தின் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை சட்டவிரோதமானவை எனக் கூறித் தடைசெய்துள்ளன.