கோட்டாபய ராஜபக்சவிற்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு கிடைப்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளது.இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக கிடைக்கும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் உறுதியளிக்கும் வரை கோட்டாபய ராஜபக்ஸவினால் நாடு திரும்ப முடியாமற்போயுள்ளதாக, முறைப்பாடு கிடைத்துள்ளதென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க, ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி ஆகியோரின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு பிரஜையும் மீண்டும் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு உள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியில் கிடைக்க வேண்டிய பாதுகாப்பை வழங்கி அவர் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்களும் மீண்டும் நாடு திரும்புவதற்கு போதுமானளவு பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதாகவும் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.