நீதிபதி சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடமாகாண சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக ஆரம்பித்து பேரணியாக முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தையடைந்து மீண்டும் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக எதிர்ப்பு கண்டன போராட்டத்தை தொடர்ந்து நிறைவு பெற்றிருந்தது. குறித்த போராட்டத்தில் நீதித்துறை மூலம் நீதியான சட்டவாட்சி நடைமுறைப்படுத்துவதை தடுக்காதே, கௌரவ நீதிபதிகளின் கடமையில் தலையிடாதே!, நீதி அமைச்சரே அநீதிக்கு துணை போகாதே, நீதிபதிகளின் பாதுகாப்பை குறைக்காதே, நீதித்துறையை சுயாதீனமாக செயற்படவிடு, கௌரவ நீதிபதிகளே சட்டத்தரணிகளாகிய நாங்கள் உங்களுடன், நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்போம் போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் கிளிநொச்சி, வவுனியா மன்னார் உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கங்களின் சட்டத்தரணிகளும் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது வடமாகாணத்திலுள்ள ஏனைய மாவட்ட சட்டத்தரணிகள் குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் இரண்டு வாரத்திற்கு கறுப்பு நிற முகக்கவசம் அணிந்து கடமையில் ஈடுபட இருப்பதாக தெரிவித்திருந்தனர்.இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் காலவரையறையின்றி தொடர் நீதிமன்ற புறக்கணிப்பினை மேற்கொள்வதோடு முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினை சார்ந்த அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள் எனவும் நேற்றையதினம் இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.