காலம் நம்புகின்றது. ஆனால் காலத்தவர்கள் நம்புவதற்கு இவர்கள் தாண்ட வேண்டிய சுவர்கள் இன்னமும் அதிகம் இருக்கின்றது

 

வீடியோ பதிவிற்கு கீழ்வரும் இணைப்பை அழுத்தவும்

SPECIAL SHOWS

விடுதலைக்காகப் போராடும் எந்தவொரு இனத்தினதும் குரல்வளை நெரிக்கப்படும் போது அந்த இனம் குறித்த ஒடுக்குமுறைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற புறத்தே இருந்து ஒரு சமூகமோ அல்லது ஒரு அரசோ இல்லை தனி மனிதனோ புறப்பட்டு வந்ததாய் இன்று வரை உலக சரித்திரத்தில் எந்த வரலாறும் இல்லை.

தமது தேவைகள் குறித்தும் தமது பூகோள நலன் சார்ந்த நகர்வுகள் குறித்தும் மட்டுமே அதிக அக்கறைப்படும் உலக சமூகம் காப்பாற்றித் தந்த ஒடுக்குமுறைக்குள்ளான மக்கள் என்பது இதுவரை எவராலும் விரல் நீட்டிக் காட்டமுடியாத ஒரு பக்கமாகவே இருக்கின்றது.

பூமிப் பந்தின் விளிம்பொன்றில் தொங்கிக்கொண்டு தெரியும் ஒரு சின்னத் தீவில் அரை நூற்றாண்டுக்கும் மேல் எரிந்துகொண்டிருக்கும் கனல் பற்றியோ எழுந்துகொண்டிருக்கும் ஓலக்குரல்கள் பற்றியோ கரிசனை கொண்டிருக்காத வல்லரசுகள் இணைந்து அழித்த ஒரு விடுதலைக் குரல் தான் தமிழீழத்துக்கான விடுதலைப் போர்.
தமக்கென ஒரு நிலம்! அந்த நிலத்துக்கென தனித்த ஒரு நாகரிகம்! அந்த நாகரிகத்தின் அடையாளக் கூறுகளாய் வாழ்ந்த மண்ணின் மாந்தர்கள்! அந்த மாந்தர்கள் காவித் திரிந்த பண்பாடு! அவர்களால் காதலிக்கப்பட்ட கலாசாரம்! அவற்றையெல்லாம் கட்டியம் சொன்ன கலைகள்! கூட்டு வாழ்க்கை! கும்மிப் பாடல்! கூட்டாஞ்சோறு! குறிஞ்சிப் பூ! முல்லை ஆறு! மருத வயல்! நெய்தல் அலை!  இப்படி வாழ்ந்து அடையாளம் சிதைக்கப்பட்ட ஒரு மண்ணின் குறிச் சொல் தான் முள்ளிவாய்க்கால்!
நாடி நரம்புகளோடு பின்னி வளராத வரை,  தன் குறித்தோ அல்லது தன் இனம் குறித்தோ பீறிட்டுவரும் தன்மான உணர்வென்பது, பல இடங்களில், பல சமூகங்களில் சாத்தியமற்றதாகவே இருக்கின்றது. எப்போதுமே,  ஒடுக்க ஒடுக்க குனிந்து கிடக்க அனுமதிக்காத தன்மான உணர்வுள்ள பிறவிகளிடமிருந்துதான் ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சியும் விடுதலை உணர்வும் மேலெழும்பி அவ்வப்போது உலகை மிரள வைத்துவிடுகின்றது. ஒடுக்குமுறையாளர்களை நோக்கி படைதிரட்டி விடுகின்றது. அப்படி உலகை மிரள வைக்கும் ஒரு புரட்சிக்கு தலைமையேற்ற ஒரு விடுதலை இயக்கத்தின் அச்சாணியாய் நின்றவர்கள் தான் தமிழீழ விடுதலைப் போரின் அடிக்கல நாயகர்கள்!
விடுதலைக்கான உணர்வு என்பது ஒரு தலைவன் என்பவனால் மட்டுமே ஒருபோதும் நிகழச் சாத்தியமாவதில்லை. அந்தத் தலைவனிடமிருந்து புறப்பட்டு வரும் ஒற்றைச் சிந்தனையாலும் ஒருமித்த ஓர்மத்தினாலும் மட்டுமே சாத்தியமாவதொன்று. தனித்து நிற்கும் தமிழீழம் என்ற ஒற்றைச் சிந்தனையும் மரணம் வரை மலினப்படாத ஓர்மத்தனமும் தான் இலங்கை என்ற தீவில் தமிழருக்கான ஒரு தேசத்தை அமைக்கும் விடுதலைக் கனவை ஒவ்வொரு மக்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்திருந்தது என்பது வரலாறு. அந்த வரலாற்றுக்கு வேராய் நின்று தமக்கு ஒரே ஒரு முறை அருளப்பட்ட வாழ்வை மண்ணின் மீட்புக்காய் அள்ளித் தந்துவிட்டு சென்ற மூலவர்களை அன்புத் தலைவன் அழைத்த பெயர் தான் அடிக்கல் நாயகர்கள்.
காலத்துக்குக் காலம் மனிதர்கள் மாறுகிறார்கள். மனிதர்களது சிந்தனைகள் மாறுகின்றன. புதிய சந்ததிகள் உருவாகி வருகின்றன. புதிய உலக ஒழுங்குகள் மனிதர்களுக்குள் புழக்கமாகிக்கொள்கின்றன. தேசங்களின் போக்குகள் மாற்றமடைகின்றன. தேசத்தவர்களின் நோக்குகள் புதுப்பிக்கப்படுகின்றன. ஆனால் தோசாந்திரிகளாய் இப்போதும் அலையும் மனிதர்களும் இனக்குழுமங்களும் மாற்றம் இன்றி உலகில் தொடர்ந்தபடியே இருக்கின்றன.
ஈழத் தமிழர்கள் ஒடுக்குமுறைப் போரால் தூக்கி எறியப்பட்டு தேசம் விட்டு தேசம் கடந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. புதிய மொழிகளோடு, புதிய தேசங்களின் வாழ்வியலோடு, கால மாற்றங்களோடு, ஏற்படும் தொழில்நுட்ப புரட்சிகளோடு, இயைந்து நகரத் தொடங்கிய தமிழினம், இப்போது மூன்றாம் தலைமுறைகளோடு இந்தத் தேசங்களில் வாழத் தொடங்கியுள்ளார்கள். தேசங்கள் தோறும் உதிரி உதிரியாயத் திரியும் எம் மக்களை இப்போது ஒன்று திரட்டவும் இரண்டாம் மூன்றாம் சந்ததி இளையோர்களின் சக்தித் திரட்சியை இனம் சார்ந்த வகையில் ஒன்று திரட்டவும், அடம்பன் கொடியாய் ஒரு தமிழ் சமூக அமைப்பை கட்டி எழுப்பவும், ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சியை கலாசார எழுச்சியை தரமுயர்த்தவும், இன்று அதிகம் தேவையாக இருப்பவை அமைப்புக்களும் அவற்றின் விஞ்ஞாபனங்களும் அல்ல. கட்டடங்களும் கோபுரங்களும் அல்ல. அரசியலும் பிரச்சாரப் பீரங்கிகளும் அல்ல. கண்டனங்களும் அறிக்கையிடல்களும் அல்ல. பிளவுகளும் அவற்றிற்கான நியாயப்படுத்தல்களும் அல்ல. செயல்களும் செயற்களங்களுமே இன்று அதிகம் தேவையாக இருக்கின்றன. அப்படி அமைந்த ஒரு செயற்களமே லண்டனில் நிகழ்ந்த அடிக்கல் நாயகர்கள் நினைவுக் கிண்ண விளையாட்டுப் போட்டி 2023.
எந்தவொரு காலப் பகுதியிலும் மனிதர்களை எழிச்சியுறச் செய்வதற்கும், ஒன்றுதிரட்டி ஒரு இலக்கு நோக்கி நகர்த்தவதற்கும் அவர்களிடம் ஒரு குழுவான சக்தித் திரள்வை ஏற்படுத்தவும் கலைகள் அல்லது விளையாட்டு அல்லது ஆன்மீகம் பெரும் பங்கு வகிக்கின்றது. காரணம் இந்த மூன்றும் மனிதன் மனிதனோடு புன்னகைத்தாலன்றி, மனிதன் மனிதனோடு கை கொடுத்தாலன்றி, மனிதன் மனிதனோடு பேசினால் அன்றி, மனிதன் மனிதனோடு அருகிருந்தாலன்றி நிகழ முடியாததொன்று. எனவே தமிழீழ அரசியல்த்துறையின் பிரித்தானியக் கிளையினரும் தமிழீழ விளையாட்டு ஆணையமும் இணைந்து செயற்களம் அமைத்த இந்த அடிக்கல் நாயகர்கள் நினைவுக்கிண்ண விளையாட்டுப் போட்டி புலம்பெயர் நாட்டில் ஈழத் தமிழ் இனத்தை பிரள்வுகளற்று ஒன்று சேர்ப்பதில் பெரும் பங்காற்றியிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
2023 இன் செப்டம்பர் 10 ஆம் நாள் காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணிவரை முழு நாளுமாக நிகழ்ந்த இந்த விளையாட்டுப் போட்டிகள் தனித்து ஒரு மைதான விளையாட்டு நிகழ்வாக அமைந்திருக்கவில்லை என்பதும் லண்டனில் வாழும் பல் வயதைச் சார்ந்த தமிழர்களை ஒரு பெரும் சமூகமாகத் திரட்டியிருந்தது என்பதும் இங்கு அடிக்கோடிட வேண்டியதொன்றாகும். எந்தவொரு சமூகம் கூட்டமாகச் சந்தித்துக் கொள்கின்றதோ, எந்த ஒரு சமூகம் குடும்பமாக ஒன்று திரள்கின்றதோ, எந்தவொரு சமூகம் தன் அத்தனை சந்ததியினரையும் ஒரே களத்தில் சந்திக்க தயாராகவுள்ளதோ, அந்த குழுமத்தினால் மலைகளை நகர்த்த முடியும் என்பது உறுதியாகின்றது. அந்த ஒரு சமூகத் திரள்வை அன்றைய தினம் Southall அமைந்துள்ள London Tigers Sports Complex மைதானம் ஏற்படுத்தியிருந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள், தமிழ் வர்த்தகர்கள், தமிழர் விளையாட்டுக் கழக வீரார்கள், ஆதரவாளர்கள்,  இளையவர்கள் பெரியவர்கள் என ஒரு பெரும் தமிழ் சமூகம் மைதானத்தை நிறைத்து நிற்க பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, பிரித்தானிய கொடி, தமிழீழ தேசியக் கொடி, மற்றும் விளையாட்டு ஆணையத்தின் கொடி என்பன ஏற்ப்பட்டு இந்தப் பெரும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இடம்பெற்ற அக வணக்கம் மாவீரர்களுக்கான பொது ஈகைச் சுடர், மலர்  மாலை  அணிவிப்பு என்பவையும் லெப்ரினன் சங்கர், லெப்ரினன் சீலன், வீரவேங்கை ஆனந் , லெப்ரினன் செல்லக்கிளி அம்மான் , கப்டன் லாலா ரஞ்சன் , லெப்ரினன் ராஜா, கப்டன் பண்டிதர், கப்டன் றெஜி மேஜர் அல்பேட், கப்டன் லிங்கம், லெப்ரினன் கேணல் விக்ரர், மேஜர் கணேஸ்
லெப்ரினன் கேணல் பொன்னம்மான் ,லெப்ரினன் கேணல் குமரப்பா , லெப்ரினன் கேணல் புலேந்தி அம்மான், லெப்ரினன் கேணல் சந்தோசம் மாஸ்ரர் கேணல் கிட்டு, லெப் கேணல் அப்பையா
என்ற பதினெட்டு அடிக்கல் நாயகர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து ஈகை ஏற்றியதென்பதும், விளையாட்டு நிகழ்வென்பதைத் தாண்டி ஒரு இனம் சார்ந்து நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தார்மீக கடமை என்பதை வரலாறு தாண்டிப் பிறந்த இளையவர்களுக்கு கடத்தும் ஒரு முனைப்பாகவும் பார்க்கவேண்டியுள்ளது.
விளையாட்டு ஆணையத்தின் அங்கத்தவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியபடி விளையாட்டு மைதானத்தை சுற்றி ஓடி, தீபம் ஏற்றி ஆரம்பித்த இந்த விளையாட்டுப் போட்டிகளில்,
மைதானம் முழுவதும் கழகச் சின்னங்களுடனும் தாம் சார்ந்த அணிகளின் அடையாளங்களைத் தாங்கியபடியும் தினவெடுத்த தோள்களோடும் வலிமை மிக்க புயங்களோடும் வீர வீராங்கனைகள் மாத்திரமல்ல அவர்களை உற்சாகம் கொடுத்து ஊக்குவிக்க அவர்களது நண்பர்கள் உறவினர்கள் அயலவர்கள் ஊரவர்கள் என தொகுதி தொகுதியாக விளையாட்டுக் களம் குதிக்க சகலரும் தயார்ப்பட்டிருந்தார்கள். உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டம் போன்ற அணிகளுக்கிடையேயான விளையாட்டு நிகழ்வுகளோடு முட்டி உடைத்தல், கயிறு இழுவை போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் பலவும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவை மாத்திரமல்ல சிறுவர்களுக்கான குறுந்தூர ஓட்டம், பழம் பெறுக்குதல், தேசிக்காய் ஓட்டம், போன்ற பலவற்றிலும் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் ஒரு கூட்டுச் சமூகமாக அன்றைய தினம் மாறிப்போயிருந்தனர்.
சிறுவர்களுடைய வேகமும் பெரியவர்களுடைய விவேகமும் பெற்றோர்களுடைய உற்சாகமும் ஏற்பாட்டாளர்களுடைய நேர்த்தியான ஒழுங்கமைப்பும் சேர்ந்து இந்த கோடை விடுமுறையின் நினைவு மறந்து போகாத ஒரு அனுபவத்தை அனைவருக்கும் கொடுத்திருந்தது. விளையாட்டு நிகழ்வுகளின் பரபரப்பைத் தாண்டி மைதானத்தின் ஏனைய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இதர விடயங்கள் அன்னும் அதிகமான சமூக இணைவை அங்கு ஏற்படுத்தியிருந்தன.
வெற்றிக்கிண்ணங்களையும் பரிசுகளையும் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த பிரிவினர் நல்வாய்ப்புச் சீட்டிழுப்பிற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த பிரிவினர் நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த பிரிவினர் மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்துகொண்டிருந்த வர்த்தகர்கள் தாயக நினைவுப்பொருட்களையும் விற்பனை செய்தபடியிருந்த  ஒரு பகுதியினர் அறுசுவை உணவுகள்இ பாராம்பரிய உணவுகள் என தாயக உணவுச் சுவையொடு மக்களை இணைத்து வைத்திருந்த சிற்றுண்டுச் சாலை நிர்வாகத்தினர் தமிழீழ அரசியற்துறை ஐக்கிய ராச்சியத்தின் தொண்டர்கள் என பல விடயங்களால் அன்று மக்களை மகிழ்ச்சி அமர்க்களத்தில் ஆழ்த்தியிருந்தது அன்றைய பொழுது.
வெளிப்படையாகப் பார்த்தால் ஒற்றை விளையாட்டு நிகழ்வாக இந்த நிகழ்வு தோன்றினாலும் ஒரு இனக் குழுமத்தை திரள் சமூகமாக ஒன்று சேர்ப்பதூடாக சாத்தியம் செய்யக்கூடிய பல வேலைத்திட்டங்களை நிறைவேற்றிய ஒரு வெற்றி நிகழ்வாகவே இதைக் கூர்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
அடிக்கல் நாயகர்கள் என்றால் யார்? அவர்கள் ஏன் தனியாக துருத்தித் தெரிகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு அவர்கள் சார்ந்த நினைவு சுமந்த பாடல் வெளியீட்டுக்கூடாக சங்கதி சொல்லத் தொடங்கியிருந்த ஆரம்ப நிகழ்வு இங்கு இடம்பெற்ற பெரும் சிறப்பம்சம் ஆகும்.
பரிசுக்குரியவர்கள் வெற்றியாளர்கள் என தமக்கான சமூக அங்கீகாரம் ஒன்றினை தமக்குரிய சொந்த சமூகத்தின் முன்னிலையில் அவர்களின் கரவொலிகளோடும் பாராட்டுகளோடும் பெற்றுக்கொள்தற்கூடாக அடுத்த சந்ததியை எம் உணர்வுகளோடும் தாயக நினைவுகளோடும் இணைத்து வைத்திருக்கும் பெரும் அரசியல் நகர்வு இங்கு மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும்.
உழைப்பின் கனதிகளுக்குள் மூழ்கி மன அழுத்தங்களிலும் பொருளீட்டலுக்கான சுமைகளிலும் களைத்துப்போகின்ற போது தாம் வாழும் இன இணைவு குறித்து சிந்திக்க முடியாத ஒரு சமூகத்தால் தமக்கான அரசியல் அடைவு குறித்து ஒரு போதும் சிந்திக்க முடியாது என்பது மிகத் தெளிவான ஒரு பார்வை. எனவே காலத்துக்குக் காலம் மனச் சுமைகளில் இருந்து தள்ளி நிற்க வேண்டியதும் மனத் தளைகளை நீக்கி தளர்வு நிலைக்கு சமூகங்களை கொண்டு வர வேண்டிதும் இன்றியமையாததாகின்றது. அந்த வகையில் எமது சமூகத்தின் சுமைகளில் இருந்து அவர்கள் தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கு ஒரு களத்தினை அமைத்துக் கொடுத்தமை இந்த நிகழ்வின் அடுத்ததொரு சிறப்பம்சம் ஆகும்.
ஆக ஒரு இனத்துக்கான அரசியல் வேலை என்பது நிலம் குறித்ததானதொன்று மாத்திரமல்ல என்பதையும், வலி குறித்ததானதொன்று மாத்திரம் அல்ல என்பதையும், உணர்ச்சியேற்றுதல் மாத்திரமல்ல என்பதையும்,  கட்சி அரசியல் சார்ந்தது மாத்திரமல்ல என்பதையும், வாக்குச் சாவடி நோக்கிய தேர்தல் அரசியல் மாத்திரமல்ல என்பதையும்,  கவன ஈர்ப்புப் போராட்டங்களுக்க அறைகூவல் விடுப்பது மாத்தரமல்ல என்பதையும்,  நினைவேந்தல்களை அனுட்டிப்பதோடு மாத்திரம் சம்பந்தப்பட்டது அல்ல என்பதையும், மேற்குலகோடு பேசுதலோடோ அல்லது அவர்களுக்கு காண்பிக்கச் சேகரிக்கும் கையெழுத்து வேட்டைகளோடு மாத்திரம் தொடர்புபட்டதொன்றோ அல்ல என்பதையும் புரிந்து வைத்திருப்பவர்களால் தான் மக்களுக்கான அரசியலை சரியாக நகர்த்த முடியும் என்பது புரிதல். அந்தப் புரிதல்களோடு  மக்களின் அன்றாட வாழ்வுகள் குறித்தும் அவர்களிடமிருந்து மேலெழும்ப வேண்டியதாகவுள்ள அடையாள பண்பாட்டு கலாசார சுதேசிய தேசிய எழுச்சி மற்றும் மறுமலர்ச்சி குறித்தும் யாரால் சரியான அளவீடுகளோடு சிந்திக்க முடிகின்றதோ அவர்களால் தான் இனி ஒரு அரசியல் மாற்றம் சாத்தியமாகும். அந்தச் சாத்தியத்தை தமிழீழ அரசியல் துறையின் பிரித்தானியக் கிளையினர் ஏற்படுத்தவார்கள் என காலம் நம்புகின்றது. ஆனால் காலத்தவர்கள் நம்புவதற்கு இவர்கள் தாண்ட வேண்டிய சுவர்கள் இன்னமும் அதிகம் இருக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது.