“இலங்கை போன்ற சிறிய தீவுகளைப் புறக்கணித்துவந்த மூலோபாயம் மாறுகின்றது”

Kumarathasan Karthigesu-பாரிஸ்

மக்ரோனின் விஜயம் குறித்து பிரெஞ்சு நிபுணர்கள் கருத்து

பிரான்ஸ் இந்தோ – பசுபிக் வட்டகையில் தனக்கென மிகப் பெரிய நிர்வாகப் பரப்பையும் சனத் தொகையையும் பொருளாதார வலயத்தையும் கொண்டிருந்த போதிலும் அதன் மூலோபாயக் கொள்கை அங்குள்ள இலங்கை போன்ற சிறிய தீவுகளை நீண்டகாலமாகப் புறக்கணித்து வந்துள்ளது. தற்போது பிரான்ஸின் அதிபர் ஒருவர் வனுவாட்டு மற்றும் இலங்கைத் தீவுகளுக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்வது அந்தக் கொள்கையில் அடிப்படையான மாற்றம் நிகழ்வதையே காட்டுகின்றது.

-இந்தோ – பசுபிக் தொடர்பான அரசியல் ஆய்வுகளைச் செய்கின்ற பிரான்ஸின் நிபுணர்கள் சிலர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இந்தோ-பசுபிக் வலயத்தில் பிரான்ஸின் ஆளுகையின் கீழ் நியூ கலிடோனியா மற்றும் பிரெஞ்சுப் பொலினேசியா அடங்கலாக ஏழு நிர்வாகப் பிரிவுகளும், (overseas departments) பிராந்தியங்களும் (regions) கூட்டாளுகைகளும் (collectivities) உள்ளன.

பாரிஸுக்கு மிகப் பெரிய கடல் ஆதிக்கத்தை வழங்குகின்ற 9மில்லியன் சதுர கிலோமீற்றர்கள் பரந்த பிரத்தியேகப் பொருளாதார வலயத்தையும் (exclusive economic zone) அது உள்ளடக்குகின்றது. இருப்பினும் இந்தப் பரந்த பிரதேசம் பிரான்ஸின் மூலோபாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்தோ – பசுபிக் வட்டகையில் அமெரிக்கா – சீனா போன்று நெஞ்சை நிமிர்த்தித் தனது வல்லாதிக்கத் தன்மையைக் காட்டுவதில் பாரிஸ் என்றைக்குமேமுனைப்புக் காட்டியதில்லை. 1996 இல் அன்றைய அதிபர் யாக் சிராக்(Jacques Chirac) பொலினேசியாவில் அணுவாயுத சோதனைகளைக் கைவிட்டதில் இருந்து இந்தப் பரந்த பிரதேசம் பாரிஸின் மூலோபாயக் கொள்கைகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டேவந்துள்ளது – என்கிறார் பாரிஸ் கத்தோலிக்க நிறுவனத்தின் பேராசிரியரும் , சர்வதேச மற்றும் உத்திசார் உறவுகள் நிறுவனத்தின் (Institute of International and Strategic Relations-IRIS) இணை ஆராய்ச்சியாளருமாகிய எமானுவல் லிங்கோ (Emmanuel Lincot).

பிரான்ஸின் அதிபர் ஒருவர் இந்தப் பிராந்தியத்துக்குக் கடைசியாக விஜயம் செய்தது 1966 இல் ஆகும். அன்றைய அதிபர் சார்ள்-து-ஹோல் வனுவாட்டு (Vanuatu) தீவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணமே அதுவாகும். பிரான்ஸின் அரசுத் தலைவர்களில் எவருமே தென் இந்தியத் தீவாகிய இலங்கையில் இதுவரை கால்பதித்ததில்லை. தற்சமயம் அதிபர் மக்ரோன் பசுபிக் வட்டகையில் இந்தத் தீவுகளுக்குச் சென்று திரும்பியிருக்கிறார்.

 

இலங்கை போன்ற சிறிய தீவுகளைப் புறக்கணித்துவந்த பிரான்ஸின் கொள்கையைச் சுட்டிக்காட்டுகின்ற மற்றொரு நிபுணராகிய மரியன் பெரோ ன் – டுவாஸ் (Marianne Peron-Doise) , மாறாக இந்தோ பசுபிக்கில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பாரம்பரிய சக்தி மிக்க நாடுகளோடு பாரிஸ் தனது உறவுகளை இறுக்கமாகப் பேணி வந்தது என்பதைக் குறிப்பிட்டுக்காட்டுகிறார்.

ஆனால் இந்த மூலோபாயத்தினால் அண்மையில் நீர்மூழ்கி விவகாரம் ஒன்றில் (Aukus affair) பாரிஸ் தனது நீண்டகாலப் பாரம்பரியப் பங்காளியாகிய ஆஸ்திரேலியாவிடம்  மூக்குடைபட நேர்ந்தது.

பிரான்ஸிடம் இருந்து 12 நீர்மூழ்கிகளை வாங்குவதற்காகச் செய்திருந்த மிக முக்கிய உடன்பாடு ஒன்றில் இருந்து 2021 செப்ரெம்பரில் ஆஸ்திரேலியா திடீரெனப் பின்வாங்கி அதே போன்ற புதிய ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா – இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளுடனும் இணைந்து செய்துகொண்டது. கன்பெராவின் எதிர்பாராத அந்தத் திடீர் “பல்டி” அச்சமயம் பங்காளி நாடுகளுடனான பாரிஸின் உறவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்தது. “ஓக்கஸ் விவகாரம்” (Aukus affair) எனப்படும் இந்த நெருக்கடி இந்தோ – பசுபிக்கில் பிரான்ஸுக்கு இருந்த செல்வாக்கு மீது பெரும் அடியாக வீழ்ந்தது.

படம் :நியூகலிடோனியாவில் பண்ணை ஒன்றைப் பார்வையிடுகிறார் மக்ரோன். (Photo :LUDOVIC MARIN / POOL / AFP)

ஆனால் தற்சமயம் பசுபிக் வலயம் மீதான தனது கவனத்தை பாரிஸ் திடீரென அதிகரிப்பதற்கு அது ஆஸ்திரேலியவிடமிருந்து பெற்ற “முதுகில் குத்திய” அனுபவம் மட்டும் காரணம் அல்ல என்று மரியன் பெரோ டுவாஸ் கூறுகிறார். அமெரிக்கா, சீனா போன்றவற்றுடன் ஒப்பிட்டால் ஐ. நா. பாதுகாப்புச் சபையின் ஓர் உறுப்பு நாடாகிய பிரான்ஸ் இந்தோ பசுபிக்கில் அதன் இராணுவ வல்லாதிக்கத்தை நிறுவுவதில் திருப்திகரமான முறையில் முழுமையான கவனம் செலுத்தியிருக்கவில்லை என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்க-சீன அதிகாரப் போட்டிக் களமாக விளங்குகின்ற இந்தோ-பசுபிக்கில் பிரான்ஸ் தனது வல்லாதிக்கத்தனத்தையும் இராணுவ இருப்பையும் நிலைநிறுத்துவதற்கு இதுவரை எடுத்துக்கொண்ட பங்கு போதாது என்றும் அந்த வலயத்தில் அதன் மேலாதிக்கத்தில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது என்றும் பிரெஞ்சுக் கொள்கை வகுப்பாளர்கள் எண்ணத் தலைப்பட்டுள்ளனர் .

அந்த இடைவெளியைச் சிறிய நாடுகளுடனான ராஜீக உறவுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக நிரப்பிக் கொள்ளும் முழு முயற்சிகளைத் தற்சமயம் மக்ரோனின் நிர்வாகம் ஆரம்பித்திருப்பதுபோலத் தெரிகிறது. -இவ்வாறு நிபுணர்கள் தங்கள் கருத்தை வெளியிட்டிருக்கின்றனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">