சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைகொள்கிறது. இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3 நிலவின் தடம் பதிக்க விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது இந்தியா. சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்பட அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து பிரதமர் உட்பட பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பூமியில் இருந்து 179 கிமீ தொலைவில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. LVM3 M4 ராக்கெட் புவியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. சந்திரயான் 3-ன் அனைத்து செயல்பாடுகளும் சரியாக உள்ளது. நிலவில் சந்திரயான் இறங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் தெரிவித்துள்ளார்.

இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் ஒரு மாதத்துக்கு மேலான பயணத்துக்கு பின் நிலவை சுற்றி வரும். நிலவை சுற்றி வந்த பின் ஆக.23 அல்லது 24ல் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. சந்திரயான்-2 இறங்குவதாக இருந்த அதே இடத்தில் தான் சந்திரயான்-3 விண்கலம் விண்கலமும் தரையிறங்குகிறது.

சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம் என்ற லேண்டரும் பிரக்யான் என்ற ரோவரும் இடம்பெற்றுள்ளது. நிலவில் லேண்டர் தரையிறங்கிய பின்னர், அதிலிருந்து ரோவர் வெளியில் வந்து நிலவின் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும். ஏதேனும் சிரமம் இருந்தால், அவற்றை கண்டறிந்து தவிர்க்கும் தொழில்நுட்பமும் விண்கலத்தில் இடம்பெற்றுள்ளது. 7 ஆய்வு கருவிகளை உள்ளடக்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் மொத்த எடை 3900 கிலோ எடை ஆகும்.

பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான்-3 விண்கலத்துக்கு சுமார் 40 நாட்கள் ஆகும். நிலவின் தென் பகுதியில் இறங்கிய பின் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.