இத்தாலியில் இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் ஆற்றில் மூழ்கிப் பலி!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
குடும்பத்தினருடன் குளிக்க சென்றபோது துயர சம்பவம்
இத்தாலியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தந்தையும் மகனும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை இத்தாலியின் பியசென்ஸா(Piacenza) மாகாணத்தில் உள்ள ட்ரெபியா ஆற்றில் (Trebbia River) இடம்பெற்றுள்ளது.
கடும் கோடை வெப்பம் காரணமாகக் கடற்கரைகள் மற்றும் நீர் நிலைகளில் குளிக்கச் செல்வோரது எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. உயிரிழந்த இருவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தனர் என்று இத்தாலி செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 60 வயதான தந்தை மற்றும் 25 வயதான மகன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அவர்களது பெயர் விவரங்கள் உடனடியாகத் தெரிய வரவில்லை.
ஆற்றில் குதித்த மகன் நீண்ட நேரமாக நீருக்கு மேலே வராதது கண்ட தந்தையார் அவரைத் தேடுவதற்காகக் குதித்துள்ளார். இருவருமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீண்ட நேரத்தின் பின்னர் சுழியோடிகள் இருவரது சடலங்களையும் ஆற்றில் இருந்து மீட்டெடுத்துக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
பியசென்ஸா மாகாணத் தீயணைப்பு, அம்புலன்ஸ் மற்றும் சுழியோடிகள் இந்த மீட்புப் பணியில் கூட்டாக ஈடுபட்டனர். ஹெலிக்கொப்ரர் ஒன்றும் மீட்பு சேவையில் இணைக்கப்பட்டது.
இதே ஆற்றங்கரைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி செனகல் நாட்டைச் சேர்ந்த 13 வயதான இளையவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, பிரான்ஸின் கடற்கரைகள் மற்றும் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கை சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. நாட்டின் தெற்கே மத்தியதரைக் கடற் கரைகளில் குளிக்கச்சென்றவர்களில் சிலர் அடுத்தடுத்து நீரில் மூழ்கிப்பலியான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.