புலம்பெயர்ந்தோர் 200 பேருடன் சென்ற படகு மாயம்.

ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தோர் 200 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன நிலையில், ஸ்பெயின் நாட்டின் மீட்புக் குழுவினர் அந்தப் படகை கேனரி தீவுகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் தேடிவருகின்றனர்.

டெனெரிஃப்பில் இருந்து சுமார் 1,700 கிமீ (1,057 மைல்) தொலைவில் தெற்கு செனகலின் கடலோர நகரமான கஃபௌன்டைனில் இருந்து மீன்பிடி படகு சென்றதாக ‘வாக்கிங் பார்டர்ஸ்’ என்ற உதவி குழு கூறுகிறது.

படகில் பயணித்த புலம்பெயர்ந்தோரில் பலர் குழந்தைகள் என்றும் இந்த உதவி குழு கூறியதாக ஸ்பெயின் நாட்டின் Efe செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டஜன் கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற இதேபோன்ற இரண்டு படகுகளும் நடுக்கடலில் மாயமானதாக தெரியவருகிறது.

சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற படகு ஜூன் 27 அன்று கஃபௌன்டைனில் இருந்து கேனரி தீவுகளை நோக்கிச் சென்றது.

ஸ்பெயின் நாட்டின் மீட்புக்குழுவினருடன் கடல்சார் மீட்பு விமானம் ஒன்றும் அவர்களைத் தேடும் முயற்சியில் உதவி வருவதாக Efe தெரிவித்துள்ளது.

காணாமல் போன மற்ற இரண்டு படகுகளில், ஒன்றில் 65 பேர் பயணம் செய்ததாகவும், மற்றொரு படகில் 60 பேர் பயணம் செய்ததாகவும், ‘வாக்கிங் பார்டர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த ஹெலினா மலேனோவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.