பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இயலுமை இலங்கைக்கு உள்ளது -உலக பொருளாதாரப் பேரவையின் தலைவர் நம்பிக்கை.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இயலுமை இலங்கைக்கு உள்ளதாக உலக பொருளாதாரப் பேரவையின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை சீனா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றார்.
இதன் ஓரங்கமாக சர்வதேச பொருளாதாரக் கட்டமைப்புக்களில் ஒன்றான உலக பொருளாதாரப் பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டியை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் மற்றும் பொருளாதார மீட்சி செயன்முறை என்பன தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நெருக்கடியிலிருந்த மீண்டெழக்கூடிய இலங்கையின் இயலுமை தொடர்பாக உலக பொருளாதாரப் பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டி இதன்போது நம்பிக்கை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று பெய்ஜிங்கில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள அமைச்சர் அலி சப்ரி, அவர்களை வர்த்தகத்துறைசார் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், இலங்கையின் நல்லெண்ணத் தூதுவர்களாக செயற்படுமாறும் ஊக்குவித்துள்ளார்.