கடன் மறுசீரமைப்பின் உண்மை நிலைமையை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும்.

கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதா? அப்படி செய்வதால் நாட்டுக்கு என்ன நடக்கும்?பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் இரத்து செய்யப்படுமா? வட்டி வீதம் இரத்து செய்யப்படுமா?

இதனால், நாட்டின் தேசிய வருமானத்திற்கு ஏற்படும் தாக்கம் என்ன? என்பதை ஜனாதிபதி தெளிவுப்படுத்த வேண்டும்.

உண்மையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன? இதன்ஊடாக வங்கிக் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுகிறது.

ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட பொது நிதிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும்.
இவை தொடர்பாக நாட்டு மக்களுக்கு யாரும் தெரியப்படுத்தாத காரணத்தினால், சிலர் தவறான கருத்துக்களையும் அவர்களிடத்தில் கூறிவருகிறார்கள்.

எனவே, ஜனாதிபதி இதுதொடர்பான உண்மை நிலைமையை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.