நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருந்த வேண்டும்: பந்துல குணவர்த்தன தெரிவிப்பு
இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமல்ல மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுகின்றனர். நாட்டில் இனவாத, மதவாத மோதல்கள் மீண்டும் உருவெடுக்குமா? என்ற சந்தேகம் இதனால் எழுந்துள்ளதுஎன அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்ச்சண்டைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர்இதனைக் குறிப்பிட்டார். மேலும் நாட்டில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் நாட்டின் நீதித்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதியுயர் சபையான நாடாளுமன்றத்திலும் சபை விதிமுறைகளை மீறி மக்கள் பிரதிநிதிகள் கூச்சலிடுகின்றனர் எனவும் தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமெனில், முதலில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருந்த வேண்டும் என தெரிவித்தார்.