எப்-16 விமானங்களை உக்ரைனுக்கு வழங்க பைடன் பச்சைக்கொடி.
Kumarathasan Karthigesu
விமானிகளுக்கும் பயிற்சி மேற்கு நாடுகள் ஆயத்தம்.
மேற்குக் கூட்டணி நாடுகள் அமெரிக்கத் தயாரிப்பான எப்-16 சண்டை விமானங்களை ( F-16 Fighting Falcon) உக்ரைனுக்கு வழங்குவதற்கு அதிபர் ஜோ பைடன் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். அந்த வகை விமானங்களைச் செலுத்துவதற்கு உக்ரைன் நாட்டு விமானிகளைப் பயிற்றுவிப்பதற்கும் அமெரிக்கா அனுமதி வழங்கியிருக்கிறது.
அமெரிக்காவின் முடிவை அடுத்து நேட்டோ உறுப்பு நாடுகளான நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே, பெல்ஜியம் ஆகிய நான்கு நாடுகள் சண்டைக்குத் தயாரான நிலையில் உள்ள 125 எப் 16 விமானங்களை உக்ரைனுக்கு வழங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை உக்ரைன் வீரர்களுக்கு வழங்குவதற்கு டென்மார்க் தயாராகி வருகிறது.
“சண்டைக் கழுகுகள்” என்று அழைக்கப்படுகின்ற எப் 16 விமானங்கள் உலகெங்கும் 25 க்கு மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் இருக்கின்ற நவீன – நான்காவது தலை முறையைச் சேர்ந்த – போர் விமானங்கள் ஆகும். அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) பாதுகாப்பு நிறுவனம் அவற்றைத் தயாரித்து வருகிறது.
உக்ரைனுக்குப் போர் ஆயுதங்களை அள்ளி வழங்குவருகின்ற அமெரிக்கா உக்ரைன் அரசுத் தலைமை திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கேட்டு வந்த நிலையிலும் தனது எப் 16 சண்டை விமானங்களை வழங்குவதற்குக் கடும் நிலைப்பாட்டுடன் மறுத்து வருகிறது.
ஆயினும் தற்போது இங்கிலாந்துப் பிரதமரது முயற்சியால் நெதர்லாந்து, டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் கூட்டணி ஒன்றின் ஊடாக உக்ரைனுக்குப் போர் விமானங்களை வழங்கும் திட்டம் ஒன்றை வகுத்து வருகின்றன. அதனை அடுத்தே ஐரோப்பிய நாடுகள் தங்கள் வசம் உள்ள எப் 16 விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவதை அனுமதிக்கும் சமிக்ஞையை அதிபர் ஜோ பைடன் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பானின் ஹீரோசீமா நகருக்குச் சென்றுள்ள சமயத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவு என்று உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி வரவேற்றுள்ளார். ஜி 7 மாநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதற்காக அவர் வார இறுதியில் ஹீரோசீமா செல்வார் என்று அறிவிக்கப்படுகிறது.
எப் – 16 விமானங்கள் ரஷ்யாவுடனான போரைத் தீவிரமாக்கிவிடலாம் என்றும். ரஷ்ய வான் பரப்பை ஊடுருவாமல் உக்ரைனின் வான் எல்லைப் பரப்பிற்குள் மட்டும் அவற்றை இயக்குவது”பறவைகளைக் கூட்டுக்குள் அடைப்பது” போன்றது என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.