ரஷ்ய எல்லைக்குள் அடுத்தடுத்துச் சிதறி வீழ்ந்த ஹெலிகள் போர் விமானங்கள்!

Kumarathasan Karthigesu

நான்கு வான்கலங்கள் அழிக்கப்பட்டது எப்படி?

அதிபர் ஷெலென்ஸ்கி மீண்டும் பாரிஸ் வந்தார்.

 

ரஷ்யாவில் இரண்டு போர் விமானங்கள், மற்றும் இரண்டு ஹெலிக்கொப்ரர்கள் அடங்கிய நான்கு  வான்கலங்கள் சனிக்கிழமை அடுத்தடுத்து வெடித்துச் சிதறி வீழ்ந்திருக்கின்றன. உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி ஐரோப்பிய நட்பு நாடுகள் சிலவற்றுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்திலேயே உக்ரைனை அண்டிய ரஷ்யாவின் எல்லைப் பகுதி நகரம் ஒன்றின் மேல் அடுத்தடுத்து இந்த நான்கு விமானங்களினதும் பேரனர்த்தம் நேர்ந்திருக்கிறது.

உக்ரைனின் வட கிழக்குப் பகுதியோடு எல்லையைக் கொண்டுள்ள ரஷ்யாவின் பிறையன்ஸ்க் பிராந்தியத்தின் (Bryansk region) வான் பரப்பில் சுக்கோய் சு – 34 குண்டு வீச்சு விமானம் (Sukhoi Su-34), சுக்கோய் சு – 35 சண்டை விமானம் (Su-35 fighter) ஆகியனவும் மற்றும் இரண்டு எம்ஐ-8ஹெலிகளுமே கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டன-என்றுரஷ்யாவின் ‘கொமர்சன்ட்'( Kommersant) பத்திரிகை அதன் இணையத் தளத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. நான்கு வான்கலங்களும் உக்ரைன் பகுதிக்குள்  பிரவேசிக்க இருந்த சமயத்திலேயே ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய சக்திகளால் அங்கு வைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன என்று செய்திகளில் கூறப்படுகிறது.

மொஸ்கோ இதனை இன்னமும் உறுதிசெய்யவில்லை. ரஷ்யாவின் இராணுவ மற்றும் பாதுகாப்புக் கட்டுரையாளர்கள் சிலரும் நான்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை உறுதிப்படுத்தி உள்ளனர். அவற்றின் விமானிகள் நால்வரும் உயிரிழந்தனர் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர் .

ஹெலிகள் வானில் வெடித்துச் சிதறி எரிவதைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தள செய்திச் சேவைகளில் பகிரப்பட்டிருக்கின்றன. ஒரு போர் விமானமும் ஹெலிக்கொப்ரர் ஒன்றும் இயந்திரக் கோளாறு காரணமாக வீழ்ந்து நொறுங்கின என்பதை மட்டும் ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

இத் தாக்குதல்கள் தொடர்பாக உக்ரைன் அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பொதுவாக ரஷ்யாவின் எல்லைக்குள் நடத்தப்படுகின்ற இவை போன்ற தாக்குதல்களுக்கு உக்ரைன் உரிமைகோருவதில்லை. ஆனாலும் இந்தச் சம்பவங்களை ஒரு “கரும வினை” என்று உக்ரைன் அதிபரது ஆலோசகர் ஒருவர் வர்ணித்துள்ளார்.

இதேவேளை – உக்ரைன் படைகள் பெரியதொரு எதிர்த் தாக்குதலை நடத்தத் தயாராகி வருகின்றன என்ற செய்திகளுக்கு மத்தியில் அதிபர் ஷெலென்ஸ்கி வார இறுதியில் இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மினி சூறாவளிச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

இத்தாலியில் புனித பாப்பரசர் மற்றும் நாட்டின் அரசுத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் அங்கிருந்து நேற்று ஜேர்மனி சென்றடைந்த அவருக்கு சான்சிலர் ஒலாப் சோல்ஸ், இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றார். பேர்ளினில் ஜேர்மனியத் தலைவர்களுடன் பேச்சு நடத்திய அவர் அங்கிருந்து நேற்று மாலை பாரிஸ் வந்தார். அவரைப் பாரிஸ் அழைத்து வருவதற்காக பிரான்ஸின் விமானம் ஒன்று ஜேர்மனிக்குச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள வில்லாகூபிளே வான் படைத் தளத்தில் (Villacoublay air base) வந்திறங்கிய அதிபர் ஷெலென்ஸ்கியையும் உக்ரைன் வெளிநாட்டு அமைச்சரையும் பிரதமர் எலிசபெத் போர்ன் அங்கு வரவேற்றார். ஷெலென்ஸ்கி பின்னர்

எலிஸே மாளிகை சென்று அதிபர் மக்ரோன் அளித்த உத்தியோகபூர்வ இரவு விருந்தில் கலந்து கொண்டார். அச்சமயம் இரு தலைவர்களும் போர் நிலைவரம் தொடர்பில் ஆலோசனை நடத்தினர். உக்ரைனுக்கான பிரான்ஸின் எல்லையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய மக்ரோன், புதிதாக இராணுவ வாகனங்களை உக்ரைன் படைகளுக்கு வழங்குகின்ற தகவலை அப்போது வெளியிட்டார். அதிபர் ஷெலென்ஸ்கி பின்னர் பாரிஸ் விஜயத்தை முடித்துக் கொண்டு லண்டன் பயணமானார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">