காசாவில் போரால் துயருறும் குழந்தைகள்!
காசாவில் தொடரும் வன்முறைக்கு குழந்தைகள் அதிக விலைகொடுக்கிறார்கள் என்றும், குழந்தைகளைக் கொல்வது அல்லது ஊனப்படுத்துவது கடுமையான மனித உரிமைமீறல் என்பதுடன், அதற்குக் காரணமானவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார் Save the Children அமைப்பின் இயக்குநர் Jason Lee.
மே 9, இச்செவ்வாயன்று தொடங்கிய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் அறிக்கைகளைத் தொடர்ந்து இவ்வாறு உரைத்துள்ள காசாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிக்கான Save the Children அமைப்பின் இயக்குநர் Jason Lee அவர்கள், தொடரும் இவ்வன்முறைகளால் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், குழந்தைகள் தஞ்சம் தேடி வருகின்றனர் என்றுக் கூறியுள்ளார்.
பலருக்கு, இந்தப் புதிய வன்முறை முந்தைய சம்பவங்களின் அதிர்ச்சிகரமான நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மே மாதம், 11 நாட்களில் 67 குழந்தைகள் உட்பட 261 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள் Lee அவர்கள், ஒவ்வொரு விமானத் தாக்குதலிலும், குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வு அழிக்கப்படுகிறது. இது அவர்களின் நீண்டகால நல்வாழ்வுக்கு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
காசாவில் பணியாற்றிவரும் எங்கள் குழுவும் அவர்களது குடும்பத்தினரும் இப்போது பாதுகாப்பாக இருக்க எங்குமே இடம் இல்லை என்று எங்களிடம் கூறுகின்றனர் என்றும், அனைவரும் அச்சத்தின் பிடியில் தங்குமிடம் தேடி வருகின்றனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார் Lee.
இந்தக் கொடூரத்தை நிறுத்துவும், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தின்படி, பதற்றத்தைக் குறைக்கவும், பொதுமக்களின் உள்கட்டமைப்புத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் அனைத்துத் தரப்பினரும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் Lee.
100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆபத்திலுள்ள குழந்தைகளைக் காப்பாற்றவும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் போராடி வரும் அனைத்துலக Save the Children அமைப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நாடு (OPT), கிழக்கு எருசலேம் உட்பட மேற்குக் கரை மற்றும் காசா பகுதியிலுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உடனடி மனிதாபிமான மற்றும் நீண்ட கால வளர்ச்சி தேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.