நடைபெற்ற ஹர்த்தாலை இனவாத மதவாத கண்ணோட்டத்தில் புலிகளின் எழுச்சி என முத்திரை குத்த வேண்டாம் : அருட்தந்தை மா.சத்திவேல் அறிக்கை.
அஹிம்சை வழியில் மக்கள் கோபத்தை வெளிக்காட்டி உள்ளனர். இதனை கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கில் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட ஹர்தாலுக்கு அனைத்து தரப்புக்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி அஹிம்ச வழியில் தமது கோபத்தை வெளிக்காட்டி உள்ளனர். இக்கோப வெளி காட்டலை தங்கள் தலைமைத்துவ கூட்டுக்கு அல்லது கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக எவரும் கருதக்கூடாது. அதே போன்று ஆட்சியாளர்கள் தங்களுக்கும் கொழும்பு அரசியலுக்கும் எதிராக தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டால் மட்டுமே நாட்டில் அரசியல் நிலை தன்மை ஏற்படும் என்பதையும் உணர்தல் வேண்டும். இதனை இனவாத மதவாத கண்ணோட்டத்தில் புலிகளின் எழுச்சி என முத்திரை குத்த வேண்டாம் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஹர்தாலுக்கு முதல் நாள் அது தொடர்பில் தமது அதிருப்தினையும், எதிர்ப்பினையும் ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். ரணில் விக்ரமசிங்க ‘பௌத்த ஆக்கிரமிப்பு நடக்கவில்லை’ என முழு பூசணிக்காய் ஒருபிடி சோற்றுக்குள் மறைக்க முற்படுவது போன்று கூறியுள்ளார். இது தமிழர்களை அழிப்பதற்கு இவர்கள் தொடர்ந்தும் செயற்படுவார்கள் என்பதையே வெளிக்காட்டுகின்றது. அத்தோடு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொட்டியா -புலி என அடையாளப்படுத்தி உள்ளனர். இது நீண்ட காலமாகவே தொடரும் ஒரு விடயமாகும். அரசியல் கைதிகளை மண்டியிட செய்தி நெற்றியில் துப்பாக்கி வைத்து கொட்டி -புலியென கொலை அச்சுறுத்தியவர்கள், ஒட்டுமொத்த தமிழர்களையும் பயங்கரவாதியாக்கி சிறைக்குள் தள்ளியவர்கள் திறந்தவெளி சிறைக்குள் வைத்தவர்கள் அதே நிலையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே மீண்டும் நாடாளுமன்ற நிகழ்வு காட்டுகின்றது.
அவர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படும் வரை நாட்டிற்கு அரசியல் எதிர்காலம் இல்லை. அதே போன்று தமிழர்களுக்கும் எதிர்காலம் இல்லை என்று கூறலாம்.இந்நிலையில் மக்களின் எதிர்ப்பினை தேசிய அரசியலுக்கான சக்தியாக விழிப்புணர்வு செய்து அதனை பெரும் சக்தியாக பரிணமிக்க வழி செய்ய வேண்டும். நடந்த எதிர்ப்பு ஹர்தாலை முழு வெற்றியாக்க தமிழ் அரசியல் தலைமைகளும், சிவில் சமூகமும் ஒன்று இணைந்து கூட்டு செயல்பாட்டிலே ஈடுபடல் வேண்டும். இவ்வாறான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் நாம் தவறவிட்டுள்ளோம் என்பதே உண்மை.
இதனைக் கருத்தில் கொண்டு திறந்த மனதோடு அரசியல் கட்சிகள் மக்கள் முன் நிற்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதுவே தமிழர்களின் அடையாளத்தையும், தேசியத்தையும் பாதுகாக்கும் செயற்பாடாக அமையும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.