பிரான்ஸின் முக்கிய தொழிற்சங்கத்துக்கு முதல்முறையாக பெண் தலைமை! அரசுடன் மோதுவாரா?
Kumarathasan Karthigesu
நாடு தொழிற்சங்கப் போராட்டங்களால் அதிர்ந்துகொண்டிருக்கும் தருணத்தில் நாட்டின் பிரதான தொழிற் சங்கத்தின் தலைமைப் பொறுப்பைப் பெண் ஒருவர் ஏற்றிருக்கிறார்.மிக நீண்ட வரலாறு கொண்ட – கடும் போக்கு- இடது சாரித் தொழிற்சங்கமாகிய CGT எனப்படும் “பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பிற்கே” (Confédération générale du travail) முதற் தடவையாக 41 வயதான சோஃபி பினெ (Sophie Binet) என்பவர் செயலாளர் நாயகமாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.
பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CGT) தேசிய காங்கிரஸ் அதன் புதிய செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்காக நேற்றுக் கூடியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் அங்கு கூடியிருந்தனர்.
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கின்ற செயலாளர் நாயகம் பிலிப் மார்டினெஸின் (Philippe Martinez) இடத்துக்குப் புதியவரைத் தெரிவு செய்யும் விவாதங்கள் முழு நாளும் நீடித்தன. பிலிப் மார்டினெஸின் ஆதரவைப் பெற்றவரான மூத்த பெண் தொழிற்சங்கவாதி மேரி பியூசொன் (Marie Buisson) என்ற பெண்ணே அடுத்த புதிய செயலாளர் நாயகமாகத் தெரிவாகுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியமான முடிவாக – சமரச அடிப்படையில் – சோஃபி பினெயைத் தொழிலாளர் காங்கிரஸ் புதிய பொதுச் செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்தது.
முன்னாள் பாடசாலை மேற்பார்வையாளரான சோஃபி பினெ, CGT தொழிற்சங்கத்தின் பொறியியலாளர்கள், முகாமையாளர்கள்,மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர்.
அத்துடன் தொழிற்சங்கத்தின் அதி உயர் நிறைவேற்றுக் குழுவில் (executive committee) சமத்துவம் தொடர்பான விடயத்துக்குப் பொறுப்பானவராகவும் விளங்கி வந்தவர்.
ஓய்வூதிய வயதை 62 இல் இருந்து 64 ஆக அதிகரிக்கின்ற மக்ரோன் அரசின் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் தொழிற்சங்கங்கள் ஓரணியாகத் திரண்டு நின்று கடந்த ஒரு மாதகாலமாக மல்லுக்கட்டி வருகின்ற சமயத்தில் அவற்றில் பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றின் தலைமைப் பொறுப்பைப் பெண் ஒருவர் ஏற்றிருப்பது நாட்டின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் எலிசபெத் போர்னுக்கும் இடையிலான முதலாவது பேச்சு எதிர்வரும் 5 ஆம் தகதி புதன் கிழமை பிரதமரது மாளிகையில் நடைபெறவுள்ளது.
CGT சங்கத்தின் சார்பில் சோஃபி பினெ அந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளார்.
CGT எனப்படும் “பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு” (Confédération générale du travail) ஐரோப்பாவின் மிகப் பழைய தொழிலாளர் இயக்கம் ஆகும். 1895 ஆம் ஆண்டு செப்ரெம்பரில் பிரான்ஸின் லிமோஸ் (Limoges) என்ற நகரில் உருவாக்கப்பட்டது. கடும் இடதுசாரிப் போக்குடைய இச் சங்கம் உறுப்பினர் எண்ணிக்கையில் தற்சமயம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மென் போக்குக் கொண்ட CFDT எனப்படும்”பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு” (Confédération française démocratique du travail) என்ற தொழிற் சங்கமே அதிகம் பரவலான தொழிலாளர் படையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மக்ரோனின் ஓய்வூதியத் திட்டத்தை எதிர்ப்பதில் இந்த இரு சங்கங்களும் தமக்குள் முரண்பாட்டைக் கைவிட்டுக் கைகோர்த்து நிற்கின்றன.