திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: மதுரையில் 5,600 பொலிஸார் குவிப்பு
Meiveli Media Team
![]()
தமிழகத்தின் மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கு ஒருமுறை அனுமதி வழங்கி கடந்த நவம்பர் 20ஆம் திகதி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசாங்கம் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையில், மதுரை மாவட்டம் முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், திருப்பரங்குன்றம் மலையில் பொதுமக்கள் ஏறுவதற்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, பக்தர்களின் மத வழிபாட்டு உரிமையைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் அமையக்கூடாது எனத் தெரிவித்தது.
மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், சீராய்வு மனு நிலுவையில் இருப்பதை அதனைச் செயற்படுத்தாமைக்கான காரணமாகக் கொள்ள முடியாது என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், தடை உத்தரவுகளின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் 5,600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலைப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் மற்றும் அரச அதிகாரிகள் மாத்திரமே தீபத்தூணுக்குச் சென்று தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் அங்கு செல்லவோ, ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ அனுமதியில்லை. இந்த அனுமதி இவ்வாண்டுக்கான ஒருமுறை ஏற்பாடு மட்டுமே என்றும், எதிர்காலத்தில் நிரந்தர உரிமையை உறுதிப்படுத்துவதாக அமையாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

