பிரித்தானியாவின்‘One in, One out’ புகலிடத் திட்டம் சர்ச்சையில்:  சிறைச்சாலைகள் கண்காணிப்பக அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

Meiveli Media Team


பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய ‘One in, One out’  திட்டத்தின் கீழ் பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக தேவையற்ற மற்றும் அச்சுறுத்தும் வகையில் அதிகாரிகள் நடந்துகொண்டுள்ளதாக பிரித்தானிய சிறைச்சாலைகளுக்கான மாட்சிமை தங்கிய கண்காணிப்பகம் -HMIP  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட ஒருவர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையிலும் விலங்கிடப்பட்டு விமானத்திற்குள் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று  திங்கட்கிழமை  வெளியிடப்பட்ட இந்த அறிக்கை,  கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி பிரான்ஸுக்கு மேற்கொள்ளப்பட்ட நாடு கடத்தல் விசேட விமானப் பயணத்தை முக்கியமாக ஆராய்ந்துள்ளது. இதன்போது மூன்று பலப்பிரயோகச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், முழுமையாக உணவு உட்கொள்ளாத நிலையில் இருந்த ஒருவரை முழுமையான கலகத் தடுப்புப் பாதுகாப்புக் கவசங்களை அணிந்த அதிகாரிகள் அறையிலிருந்து வெளியேற்றி, இடுப்பு மற்றும் கால்களில் விலங்கிட்டு விமானத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.
எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத அந்த நபருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பலப்பிரயோக முறைகள் அளவுக்கு மீறியவை என விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விமானப் பயணத்தின்போது அவர் சோர்வடைந்து, பேச முடியாத நிலையில் காணப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்கொலை ஆபத்து காரணமாகத் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மற்றுமொருவரும் இடுப்பு மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு விமானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தமது நாடு கடத்தலுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை எனத் தெரிவித்த மூன்றாவது நபருக்கும் இடுப்பு விலங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,  பிரான்ஸுக்கு மேற்கொள்ளப்பட்ட முந்தைய நான்கு நாடு கடத்தல் விமானப் பயணங்களின் காணொளிப் பதிவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், மேலும் ஒன்பது பலப்பிரயோகச் சம்பவங்களை அடையாளம் கண்டுள்ளனர். அவற்றில் குறைந்தது ஒரு சம்பவம் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
‘One in, One out’ திட்டத்தின் கீழ்,  சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவரை பிரான்ஸுக்குத் திருப்பி அனுப்புவதற்குப் பதிலாக, பிரான்ஸில் உள்ள மற்றொருவரை சட்டபூர்வமாகப் பிரித்தானியாவுக்கு அழைத்து வந்து புகலிடம் கோர அனுமதிப்பதே திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் நாடு கடத்தப்படுபவர்களில் மோதல் பகுதிகளிலிருந்து தப்பி வந்தவர்கள், சித்திரவதை மற்றும் ஆட்கடத்தலுக்கு உள்ளானவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">