லண்டன் Trafalgar சதுக்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசியக் கொடி நாள் நிகழ்வு!

Meiveli Media Team


தமிழீழ தேசியக் கொடி நாளை முன்னிட்டு, லண்டனின் புகழ்பெற்ற ட்ரஃபல்கர் சதுக்கத்தில் மாபெரும் தமிழீழ தேசியக் கொடி நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றுள்ளது.
நவம்பர் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

பிரித்தானியாவில் வாழும் பெருமளவிலான தமிழ்மக்கள், இளையோர், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

தமிழீழ தேசியக் கொடியின் வரலாறு, அதன் அடையாளம் மற்றும் தமிழீழ மக்களின் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை அமைச்சர் அன்ரன் நோபர்ட் மற்றும் அமைச்சர் மணிவண்ணன் பத்மநாபன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள் அணிவகுக்க, தமிழீழ தேசியக் கொடி மரியாதையுடன் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டமை அங்கு கூடியிருந்த பிரித்தானியப் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, அமைச்சர் மணிவண்ணன் பத்மநாபன் ஏந்திவந்த தமிழீழ தேசியக் கொடி, நிகழ்வின் மையப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

அனுசன், ஆன் றொசிவி ராஜேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அற்புதநாதன், நிசாந்தன் நவரட்ணராஜா, கதிர்காமநாதன் முத்தையா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகா, Star Lightz Fusion இயக்குநர் டாக்டர் மொஹமட் அரீப், அமைச்சர் மணிவண்ணன் பத்மநாபன் மற்றும் அனைத்துலக வரலாற்று மைய இணைப்பாளர் சங்கீதன் உள்ளிட்டோர் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து, Star Lightz Fusion இசைக்குழுவினரால் பிரித்தானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் அசோகன் சுதர்சன் பிரித்தானிய தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியூகாசில் தொடர்பாளர் தர்சிகா ஜோண்சன், தமிழீழ தேசியக் கொடியின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பான அறிமுக உரையை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, போராளியும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மகளிர் அமைப்பின் இணைப்பாளரும் இளையோர் பண்ணிசை அணியின் மேலாளருமான திருமதி பூங்குயில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

இதன்போது, பிரித்தானியாவில் முதன்முறையாக தமிழீழ தேசியக் கீதம் Star Lightz Fusion இசைக்குழுவினரால் நேரடியாக இசைக்கப்பட்டடிருந்தது.

மேலும், தமிழீழத்தின் ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில், தமிழீழ வரைபடத்தில் மாவட்ட ரீதியாக விளக்கேற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.

ஆடல், பாடல், கவிதை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், முக்கிய பிரமுகர்களின் கொடி நாள் உரைகளும் நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் இணைப்பாளர் சங்கீதன் சிறப்புரையாற்றியதுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் விஸ்வநாதன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து ஆற்றிய கொடி நாள் உரையின் காணொளியும் நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

தமிழீழ தேசியக் கொடியின் வரலாற்றையும் அதன் அடையாளத்தையும் அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு, லண்டனின் மையப்பகுதியான ட்ரஃபல்கர் சதுக்கத்தில் பிரித்தானிய வாழ் தமிழ்மக்களின் பெருமளவான பங்கேற்புடன் நிறைவடைந்தது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">