வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகள் தடுப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: திருத்தங்களின்றி அங்கீகாரம்

Meiveli Media Team


இலங்கையில் வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகளைத் தடுப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் திருத்தங்களின்றியும் வாக்கெடுப்பின்றியும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 23ஆம் திகதி மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 2178ஆம் இலக்கத் தீர்மானத்திற்கு அமைவாக, வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகளின் நகர்வுகள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுப்பதே இந்தச் சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்படி, இலங்கைக்குள்ளும் வெளிநாடுகளிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அவற்றுக்குத் திட்டமிடுதல், தயார்ப்படுத்துதல், பங்கேற்றல் மற்றும் பயங்கரவாதப் பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெற்றுக்கொள்ளுதல் ஆகியவை குற்றங்களாக வரையறுக்கப்படவுள்ளன. மேலும், இலங்கைப் பிரஜைகள் மாத்திரமன்றி வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பிலும், குறித்த குற்றச்செயல் இடம்பெறும் நாட்டின் சட்டத்தின்கீழும் அது குற்றமாகக் கருதப்படும் பட்சத்தில், இலங்கையில் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்தச் சட்டமூலம் இன அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்றும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களைக் குறிவைப்பது இதன் நோக்கமல்ல என்றும் அரசாங்க அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவில் விளக்கமளித்துள்ளனர். எனினும்,  இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் தரப்பினரிடையே ஏற்கனவே கவலைகளும் எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">