சோமதேவவின் செம்மணி அறிக்கைகள் முரண்பாடானவை என நீதிமன்றம் தீர்ப்பு

Meiveli Media Team

செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள புதிய தடயவியல் தொல்லியல் அறிக்கையில் முரண்பாடுகள், தெளிவுபடுத்தப்படாத இடைவெளிகள் மற்றும் தவறான தகவல்கள் காணப்படுவதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த அறிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க முடியாது என நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தெரிவித்துள்ளார். சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி தொடர்பில், பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் தொல்லியலாளர் அனுஷா வன்னிநாயக்க ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 190 பக்க அறிக்கை கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு எதிராகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி கஸ்தூரி அகலங்கன் எழுத்துமூல ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார். கடந்த நவம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற நிர்வாகக் கலந்துரையாடலின்போது, குறித்த அறிக்கையில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் விடுபடல்கள் தொடர்பில் நீதவான் தனது அவதானிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, சோமதேவவின் ஆரம்பகால மூன்று இடைக்கால அறிக்கைகளிலும் செம்மணி அகழ்வாய்வு இடம் மனிதப்புதைகுழி எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், புதிய அறிக்கையில் அந்தக் குறிப்பு நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு அதிகமான மரணங்கள் இடம்பெற்றிருந்தால், அதனை உறுதிப்படுத்தும் வைத்தியசாலை,  சுகாதாரத்துறை, பொலிஸ் அல்லது உள்ளூராட்சி நிர்வாக ஆவணங்கள் எங்கே எனப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அகழ்வாய்வில் மீட்கப்பட்ட பாடசாலைப் பை, ஒற்றைச் செருப்பு, நாணயங்கள் மற்றும் பொம்மை உள்ளிட்ட பொருட்களின் காலப்பகுதி முறையாகத் தீர்மானிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் பெரியம்மை நோய் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைச் சுட்டிக்காட்டி, புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விளக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குறித்த அறிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என நீதவான் தீர்மானித்துள்ளார். இதேவேளை, தற்போது அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிக்கு அப்பாலும் மனித எச்சங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நிலத்தடி ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேலதிக அகழ்வாய்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனக் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் மிராக் ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை தொடர்பான அடுத்தகட்டத் தீர்மானம் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கலந்துரையாடலில் எடுக்கப்படும் என நீதவான் அறிவித்துள்ளார்.