பிரபாகரன் ஆத்மகௌரவம் உள்ளவர்: சரணடையுமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அவர் இணங்கவில்லை’ – சரத் பொன்சேகா கருத்து
Meiveli Media Team

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆத்மகௌரவம் கொண்ட ஒருவர் என்பதாலேயே, சரணடையுமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அவர் உடன்படவில்லை என இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் புதிதாக ஆரம்பித்துள்ள அரசியல் இயக்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா, புலித் தலைவர்களை இராணுவத்தினர் சுமார் 10 கிலோமீற்றர் தூரத்துக்குள் முடக்கியிருந்த நிலையில், திடீரென போர் நிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தெற்கில் மக்கள் போர் வெற்றியைக் கொண்டாடுவதற்காகப் பாற்சோறு தயாரிக்கத் தயாராகியிருந்த வேளையில், ஆட்சியாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், 2009 மே 17ஆம் திகதியளவில் புலித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் சுமார் 400 மீற்றர் தூரத்துக்குள் இராணுவத்தினர் முடக்கியிருந்ததாகவும், அச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்து சரணடையுமாறு ஆட்சியாளர்கள் தரப்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், பிரபாகரன் ஆத்மகௌரவம் கொண்டவராக இருந்ததால் அந்த யோசனைக்கு இணங்கவில்லை எனக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, இராணுவத்திடம் சரணடைவதைவிடப் போரிட்டு உயிரிழப்பதே சிறந்தது என அவர் கருதியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் போர் வெற்றியைக் கொண்டாடுவதற்கு மக்கள் தயாராக இருந்தபோதிலும், அப்போதைய அரச தலைவர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் விடுதலைப் புலிகளை உயிருடன் கைது செய்வதற்கு முயற்சித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அவ்வாறு புலித் தலைவர்கள் உயிருடன் கைது செய்யப்பட்டிருந்தால், வடக்கு மற்றும் கிழக்கில் மீண்டும் போர் ஆரம்பமாகியிருக்கக்கூடிய சாத்தியம் இருந்ததாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

