பெரு நாட்டில் தம்மை நோக்கி வீசப்பட்ட ஜெபமாலை கண்ணில் பட்ட சம்பவம்: வீசிய நபரை மன்னித்த போப் ஆண்டவர் 14ஆம் லியோ
Meiveli Media Team

தென் அமெரிக்காவுக்கான 12 நாள் பயணத்தின் இறுதி நிகழ்வாக, பெருவின் தலைநகர் லிமாவில் நடைபெற்ற பிரியாவிடைத் திருப்பலியில் பங்கேற்பதற்காகப் போப் ஆண்டவர் சென்றுகொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 15 இலட்சம் மக்கள் திரண்டிருந்த லிமா விமானப்படைத் தளத்தில், திறந்த வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போப் ஆண்டவரை நோக்கி கூட்டத்திலிருந்த ஒருவர் ஜெபமாலையை வீசியுள்ளார். அது எதிர்பாராத விதமாக அவரது கண்ணுக்கு அருகில் பட்டுள்ளது. இதனால் வலியால் முகத்தைச் சுளித்த அவர், கண்ணைத் தொட்டுப் பார்த்துள்ளார். இருப்பினும், பயணத்தையும் நிகழ்ச்சியையும் அவர் இடைநிறுத்தவில்லை. பின்னர் ரோம் நோக்கித் திரும்பிய விமானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பெருவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த போப் ஆண்டவர், தம்மை நெருங்கி வந்து ஜெபமாலையை வழங்க வேண்டும் என்ற ஆழமான விசுவாசத்துடனேயே அந்த நபர் அவ்வாறு செய்திருக்கலாம் எனக் குறிப்பிட்டு, அவரை மன்னித்துள்ளார். மேலும், சில விடயங்கள் இதயத்தில் மட்டுமல்ல, கண்ணிலும் அடையாளத்தை ஏற்படுத்திவிடுகின்றன என நகைச்சுவையாகவும் அவர் தெரிவித்துள்ளார். போப் ஆண்டவர் பெருவில் சுமார் இரண்டு தசாப்தங்கள் மதப்பணியாற்றியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

