மியான்மாருக்கு நீதி கிடைக்கும்போது, முள்ளிவாய்க்காலுக்கு ஏன் நீதி இல்லை: சுகாஷ் கேள்வி

Meiveli Media Team


மியான்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏன் இதுவரை நீதி கிடைக்கவில்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு மியான்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட படுகொலைகள் இனப்படுகொலை எனத் தீர்மானிக்கப்படுமானால், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரின் இறுதி நாட்களில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஏன் சர்வதேச விசாரணை நடத்தப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற அரசியல் பிரதிநிதிகள், சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமல் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், மாவீரர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் ஆண்டுதோறும் மலர் தூவி அஞ்சலி செலுத்துவதுடன் நின்றுவிடாமல், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் அரசியல் மாற்றத்திற்குத் தயாராக வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். எமது போராட்ட வரலாற்றையும் மாவீரர்களின் தியாகங்களையும் அடுத்த தலைமுறையினருக்குத் தொடர்ச்சியாக எடுத்துச் சொல்ல வேண்டும். போராட்ட வரலாற்றை மறந்ததன் விளைவாகவே இன்றைய இளைஞர் சமுதாயத்தின் ஒரு பகுதியினர் திசைமாறிச் செல்கின்றனர் எனவும் கனகரத்தினம் சுகாஷ் மேலும் தெரிவித்தார்.