யாழ்ப்பாணம் SLIIT Northern Uni -க்கு லெஸ்டர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உத்தியோகபூர்வ விஜயம்ஷ!

Meiveli Media Team


பிரித்தானியாவின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள SLIIT Northern Uni கல்வி நிறுவனத்திற்கு நேற்று  உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது,  SLIIT Northern Uni  நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நீண்டகால மூலோபாயத் திட்டங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக, சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடனான கல்விசார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாடுகளின் தரத்தை மேம்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை ஊக்குவித்தல், முதுமாணிப் பட்டக் கற்கைநெறிகளை விரிவுபடுத்துதல், மருத்துவக் கல்வியை SLIIT Northern Uni -யில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பில் பேராசிரியர் தனது ஆலோசனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

சர்வதேச அனுபவமும் சிறந்த கல்விசார் தலைமைத்துவ ஆற்றலும் கொண்ட பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜாவின் இந்த விஜயம்,  SLIIT Northern Uni -யின் சர்வதேச அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், வடக்கு மாகாண இளைஞர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் முக்கிய பங்காற்றும் என நிறுவன நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சமிக்ஞைச் செயலாக்கம் ((Signal Processing ) மற்றும் உருவ அமைப்பு வகைப்பாடு உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வியாளரான பேராசிரியர் நிஷான் கனகராஜா, 2019ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
உயர்கல்வித் துறைக்கான பங்களிப்பு, கல்வியில் சமத்துவத்தை மேம்படுத்துதல், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அகதி மாணவர்களின் கல்விக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பணிகளைக் கௌரவிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் அவருக்கு Knighthood  விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.