ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் நெருக்கமாகும் பிரித்தானியா:  பிரெக்ஸிட் தீர்மானத்தின் முடிவுகள் குறித்து புதிய விவாதம்!

Meiveli Media Team

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் பிரித்தானியா எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் வர்த்தகச் சவால்களைக் குறைப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் பிரித்தானியப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் ஈடுபட்டுள்ளார். பிரெக்ஸிட் மூலம் பிரித்தானியா பெற்ற நன்மைகளை விட இழப்புகளே அதிகம் எனத் தெரிவித்துள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவுகள் குறித்து வெளிப்படையான தேசிய விவாதம் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
2020ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறிய பிரித்தானியா, அதன் பின்னர் தனித்துவமான வர்த்தக மற்றும் குடியேற்றக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றது. எனினும்,  ஐரோப்பிய சந்தைக்கான ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு, வர்த்தக நடைமுறைகளில் அதிகரித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் செலவுகள் தொடர்பில் தற்போது கவலைகள் எழுந்துள்ளன.  இதற்கிடையில்இ எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி நடைபெறவுள்ள பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் வர்த்தகம்,  எரிசக்தி, கார்பன் சந்தை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களில் புதிய உடன்பாடுகளை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன், இளைஞர்களுக்கான பயணம் மற்றும் தற்காலிக வேலைவாய்ப்புகளை இலகுபடுத்தும் திட்டம் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடவுள்ளனர். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதில் சில சவால்களும் காணப்படுகின்றன.
முன்னாள் ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தையாளர் மிச்சேல் பார்னியே உள்ளிட்ட ஐரோப்பிய அரசியல் பிரமுகர்கள்இ ஒற்றைச் சந்தையுடன் மீண்டும் இணைவதற்கு மக்களின் சுதந்திரமான நடமாட்டம் உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். மறுபுறம்,நைஜல் ஃபராஜ் தலைமையிலான ரிஃபோர்ம் யுகே கட்சி உள்ளிட்ட பிரெக்ஸிட் ஆதரவு அரசியல் தரப்பினர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதால் குடியேற்றக் கட்டுப்பாடுகள் பாதிக்கப்படலாம் என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது உடனடித் திட்டமல்ல எனவும், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் வகையில் உறவுகளை மேம்படுத்துவதே எனவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.