மும்பையில் சிறுவர் எர்த்ஷாட் விருது விழா – இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேட் பங்கேற்பு!
Meiveli Media Team

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர், இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற சிறுவர் எர்த்ஷாட் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளனர். நவம்பர் 17ஆம் திகதி மியூசியம் ஒப் சொல்யூஷன்ஸ் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறுவர்களின் புத்தாக்க முயற்சிகளையும் தலைமைத்துவத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘I CAN Earthshot Challenge’ திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், இந்தியாவின் 24 மாநிலங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பாடசாலைகளிலிருந்து சுமார் பத்து இலட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான 15 மாணவர் குழுக்கள் மும்பைக்கு அழைக்கப்பட்டு, தமது சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களைச் சமர்ப்பித்துள்ளதுடன், பல்வேறு பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கேற்றுள்ளன.
ஐந்து முக்கியப் பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இளவரசர் வில்லியத்தினால் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எர்த்ஷாட் விருது, உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் புத்தாக்க முயற்சிகளை ஊக்குவித்து வருகின்றது. இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தின் ஒரு பகுதியாக மும்பை சென்றுள்ள அரச தம்பதியினர், இதற்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் வீதியோரக் கிரிக்கெட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று புதுடில்லிக்குச் செல்லும் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

