‘தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் சிறுவயதில் வசித்த வீடு’ எனப் போடப்பட்டபதாகை கிழித்தெறிப்பு – வல்வெட்டித்துறையில் பரபரப்பு!
Meiveli Media Team

வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிறுவயது இல்லம் தொடர்பாகக் காணியின் மதிலில் பொருத்தப்பட்டிருந்த பதாகை, இனம் தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டுள்ளது. ‘தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் சிறுவயதில் வசித்த வீடு’ எனக் குறிப்பிடப்பட்டிருந்த குறித்த பதாகையில், அவர் வசித்த வீட்டின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள பிரபாகரனின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த பகுதியைப் பார்வையிட்டிருந்தார்.
அவரது வருகையைத் தொடர்ந்து குறித்த பதாகை கிழித்தெறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் அமைந்திருந்த பிரபாகரனின் இல்லம் ஏற்கனவே இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த இடம் வெறும் காணியாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில், பதாகை கிழித்தெறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

