இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி மோசடிகள் – விசாரணைக்கு FBI குழு களமிறக்கம்!

Meiveli Media Team


இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி மோசடிக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக,  அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகமான FBI, இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு விசேட உதவிகளை வழங்கவுள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட சட்ட அமுலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தமது சட்டவிரோதச் செயற்பாடுகளை இலங்கைக்கு மாற்றியுள்ள இணைய மோசடிக் கும்பல்களைக் கண்டறிவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதற்கமைய, ஒரு வார காலப் பயணமாக இலங்கைக்கு வரவுள்ள FBI அதிகாரிகள், உள்ளூர் புலனாய்வாளர்களுக்குப் பயிற்சியளிப்பதுடன்,  டிஜிட்டல் தடயவியல், குற்றவாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர். போலி காதல் உறவுகள், கிரிப்டோகரன்சி முதலீடுகள் மற்றும் இணையவழிப் பந்தயங்கள் ஊடாகப் பொதுமக்களை ஏமாற்றும் மோசடிக் குழுக்கள் தற்போது பல்வேறு ஆசிய நாடுகளில் செயற்பட்டு வருகின்றன.

இலங்கையில் இயங்கும் இவ்வாறான வலையமைப்புகள் இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இலக்குவைத்து மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இணையவழிக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், ஆயிரத்து 100 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, இத்தகைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக சீனாவும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.