புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்களுக்கு எதிராக நாடளாவிய போராட்டம் அவசியம் – சுமந்திரன் வலியுறுத்தல்!
Meiveli Media Team

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், இதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் நிலையில், அதற்குப் பதிலாக ஒரு சட்டமல்ல, இரண்டு புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த இரண்டு சட்டங்களிலும் ஆபத்தான ஏற்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்த சுமந்திரன், அவை நிறைவேற்றப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதற்கான உரிமைகள் பாதிக்கப்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார். எனவே, இந்தச் சட்டமூலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு தற்போது முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டங்களை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த வேண்டும் என்றும், அதற்குக் குறுகிய கால அவகாசமே எஞ்சியுள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

