பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை – £7,000 வரை அபராதம்!
Meiveli Media Team

பிரித்தானியாவில் வீடுகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பில் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வாடகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய Renters’ Rights Act 2025 சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட விதிமுறைகளை மீறும் வீட்டு உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 7,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம். குறிப்பாக, வாடகை ஒப்பந்தங்களைச் சட்டத்திற்கு முரணாக நிர்ணயிப்பது, வாடகை ஒப்பந்தத்தை வாய்மொழியாக முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பது, சட்டப்படி வழங்க வேண்டிய எழுத்துப்பூர்வ அறிவிப்புகளை வழங்கத் தவறுவது போன்ற செயல்கள் அபராதத்திற்கு வழிவகுக்கலாம். மேலும், புதிய சட்ட மாற்றங்கள் தொடர்பான அரசாங்கத்தின் தகவல் ஆவணத்தை ஏற்கனவே உள்ள வாடகைதாரர்களுக்கு 2026 மே 31ஆம் திகதிக்குள் வழங்கத் தவறினாலும் அபராதம் விதிக்கப்படலாம். அதேபோன்று, வாடகை வீடுகளில் கடுமையான ஈரப்பதம், பூஞ்சை, மின்சாரக் கோளாறுகள், தீப்பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கட்டடப் பாதுகாப்பு பிரச்சினைகளைச் சரிசெய்யத் தவறும் உரிமையாளர்களுக்கும் 7,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்க உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அபராத நடவடிக்கை 2026 ஜூன் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. எனவே, பிரித்தானியாவில் வீடுகளை வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்கள் தங்களது வாடகை ஒப்பந்தங்கள், சட்ட ஆவணங்கள் மற்றும் வீடுகளின் பாதுகாப்பு நிலைமைகளைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இந்தச் சட்ட மாற்றங்கள் இங்கிலாந்தில் உள்ள தனியார் வாடகை வீடுகளுக்குப் பொருந்துவதோடு, வாடகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாதுகாப்பற்ற வீடுகளில் மக்கள் வசிப்பதைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

