மும்பை தெருக்கிரிக்கெட்டில் விளையாடிய பிரித்தானிய அரச தம்பதியினர் – சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து விளையாட்டு!
Meiveli Media Team

பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி இளவரசி கேத்தரினும், இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தின் ஒரு பகுதியாக மும்பையில் உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து தெருக்கிரிக்கெட்டில் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இதன்போது, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் கலந்துகொண்டு அரச தம்பதியினருடன் இணைந்து விளையாடியுள்ளார். மும்பையில் நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான எர்த்ஷாட் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இளவரசி கேத்தரின் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், உள்ளூர் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
இதேவேளை, ஆண்டுதோறும் வழங்கப்படும் எர்த்ஷாட் விருதுக்காக ஐந்து பிரிவுகளின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ள 15 இறுதிப் போட்டியாளர்களில் இருந்து ஐந்து வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தமது சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக ஒரு மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது. இயற்கைப் பாதுகாப்பு, கடல் வளப் பாதுகாப்பு, கழிவுகளைக் குறைத்தல், காலநிலை நடவடிக்கை மற்றும் தூய்மையான காற்று ஆகியவை விருதுக்கான ஐந்து பிரிவுகளாகும். நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள விருது விழாவில் பொலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல சர்வதேசப் பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மும்பை விஜயத்தைத் தொடர்ந்து அரச தம்பதியினர் புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

