நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப ஐந்து ஐரோப்பிய நாடுகள் திட்டம்!
Meiveli Media Team

ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்து, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கான புதிய திட்டமொன்றை ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து முன்னெடுக்கவுள்ளன. ஜேர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமையஇ ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்குவதற்கான அனைத்து சட்டரீதியான வாய்ப்புகளும் முடிவடைந்த பின்னரும் நாடு திரும்பாத புகலிடக் கோரிக்கையாளர்களை, ருவாண்டாவில் அமைக்கப்படும் விசேட மையங்களில் தங்கவைத்து, பின்னர் அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதே திட்டத்தின் நோக்கமாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்றக் கொள்கை விதிமுறைகள், ஒன்றியத்துக்கு வெளியே இவ்வாறான மீள்குடியேற்ற மையங்களை அமைப்பதற்கு வழிவகுத்துள்ளன.
வியன்னாவில் நடைபெறவுள்ள குடியேற்றம் தொடர்பான மாநாட்டை முன்னிட்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த நடவடிக்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் கடும் கவலை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, தங்களுடன் நேரடித் தொடர்பில்லாத மூன்றாவது நாடொன்றுக்கு அனுப்பப்படும் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் மீறப்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதேபோன்ற திட்டமொன்றை முன்னர் பிரித்தானியா முன்னெடுக்க முயன்றபோதும், சட்டச் சிக்கல்களால் அது கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

