இரண்டு மாதச் சிசுவுடன் குகையில் மீட்கப்பட்ட 15 வயதுச் சிறுமி – சம்பவத்தை காதலாகச் சித்தரிப்போருக்கு அமைச்சர் கடும் கண்டனம்
Meiveli Media Team

இலங்கையின் நக்கிள்ஸ் மலைத்தொடர் பகுதியில், கடந்த ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயதுச் சிறுமி ஒருவர், இரண்டு மாதப் பெண் சிசுவுடன் வனப்பகுதிக் கற்குகையிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். கண்டி உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே, கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி காணாமல் போனமை தொடர்பில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, நாளாந்தம் அதிகளவிலான அரிசியைக் கொள்வனவு செய்து சென்ற இளைஞர் ஒருவர் மீது பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், குடியிருப்புகளிலிருந்து தொலைவிலுள்ள கற்குகையொன்றில் பொலித்தீன் விரிப்புகளால் மறைக்கப்பட்ட இடத்தில் சிறுமியும் இரண்டு மாதச் சிசுவும் தங்கியிருந்தமையைக் கண்டறிந்தனர். இதன்போது, சிசுவின் தந்தையெனக் கூறப்படும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் 36 வயது உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார். குகைக்குள்ளேயே சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளதுடன், முறையான மருத்துவ உதவியின்றி பிரசவத்துக்குப் பின்னரான பராமரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சிறுமியும் சிசுவும் மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், சம்பவம் தமக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து அரச தலையீடுகளையும் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துவௌியிட்ட அவர், சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்வைக் காதலின் உன்னத நிலையாகச் சித்தரிப்பவர்களுக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
இச்சம்பவத்தை எக்காரணம் கொண்டும் ‘உன்னதமான காதலின் வெளிப்பாடு’ என்றோ அல்லது ‘வீரச் செயல்’ என்றோ கருதக் கூடாது எனத் தெரிவித்த அமைச்சர், இது 16 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியுடன் மேற்கொள்ளப்பட்ட சட்டப்பூர்வமான வன்புணர்வு மற்றும் குற்றவியல் தவறு என்பதைத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இதனை ‘காதலின் சின்னம்’ என வர்ணித்து பதிவுகளை வெளியிடுவது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாகும் எனவும், இது சமூகத்தை முற்றிலும் தவறான பாதைக்கு திசைதிருப்பும் செயலாகும் எனவும் அவர் கடுமையாக எச்சரித்தார். ஒரு குழந்தை மற்றொரு குழந்தையைப் பராமரிக்க வேண்டிய பரிதாபகரமான நிலை இங்கு ஏற்பட்டுள்ளதாகவும், முறையான கர்ப்ப காலப் பராமரிப்புகளோ அல்லது பச்சிளம் குழந்தைக்குப் பிறப்பு முதல் இரண்டு மாதங்கள் வரை வழங்கப்பட வேண்டிய அவசியமான தடுப்பூசிகளோ எவையும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.அத்துடன், சிறுவர்கள் 16 வயது வரை கட்டாயக் கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோரின் முழுப் பொறுப்பாகும் எனவும், பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றோருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் எச்சரித்துள்ளார்.
மேலும், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான குடும்பச் சூழலை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமைச்சர், 2027 ஆம் ஆண்டு முதல் புதிய மாற்றுப் பராமரிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பும் உரிமைகளும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பு என வலியுறுத்தியுள்ள அமைச்சர், சிறுவர்கள் தொடர்பில் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

