ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் சிவாஜிலிங்கத்தின் இறுதிப் பயணம் நிறைவு!
Meiveli Media Team

தமிழ்த் தேசியத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்இ வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
அன்னாரது மறைவையொட்டி வல்வெட்டித்துறை நகரமே துயரத்தில் மூழ்கியிருந்ததுடன், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, தமிழ்த் தேசியக் கொடிகள் மற்றும் நினைவஞ்சலிப் பதாகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட அவரது புகழுடல், மக்கள் புடைசூழ ஊர்வலமாக வல்வெட்டித்துறை நகர சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நகரின் மத்தியில் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த அஞ்சலி மேடையில் புகழுடல் வைக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், பழ. நெடுமாறனின் பிரதிநிதி ஆவல் கணேசன் ஆகியோரும் நேரில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் புகழஞ்சலி உரைகளையும் நிகழ்த்தினர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், ஜீவன் தொண்டமான், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான என். சிறீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வீ. ஆனந்தசங்கரி, செல்வராசா கஜேந்திரன், ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்டோரும் புகழஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். அத்துடன், தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை ஜெகதாஸ், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், போராளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது, போராட்டக் களங்களில் தங்களுக்கு முன்னின்று வழிநடத்திய தலைவரை இனி யார் வழிநடத்தப் போகின்றார்கள் என மக்கள் கண்ணீருடன் கதறியழுத காட்சிகள் அங்கிருந்தவர்களைப் பெரிதும் நெகிழ்ச்சியடையச் செய்தன. இறுதியாக, தமிழர் பாரம்பரிய முறைப்படி பூந்தண்டிகை பாடையில் சுமந்துசெல்லப்பட்ட அன்னாரது புகழுடல், வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் மாலை நான்கு மணியளவில் தகனம் செய்யப்பட்டது.ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கும் புகழஞ்சலிக்கும் மத்தியில் சிவாஜிலிங்கத்தின் இறுதிப் பயணம் நிறைவடைந்தது.

