இலங்கை தேசிய பூங்காக்களில் பிகினி மற்றும் அரை நிர்வாணப் புகைப்படப் படப்பிடிப்புகளா? இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து சர்ச்சை!
Meiveli Media Team

இலங்கையின் யால, குமண மற்றும் லுனுகம்வெஹெர தேசிய பூங்காக்களுக்குள் வெளிநாட்டு மொடல்களை அழைத்துச் சென்று, பிகினி மற்றும் அரை நிர்வாணப் புகைப்படப் படப்பிடிப்புகளை வர்த்தக நோக்கில் முன்னெடுப்பதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மிருகக்காட்சிசாலைகளின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஷர்மிலா ராஜபக்ச இந்த விவகாரம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தப்படும் சில விசேட சுற்றுலாப் பொதிகளில், வெளிநாட்டு மொடல்களைத் திறந்தவெளி சஃபாரி வாகனங்கள் மூலம் தேசிய பூங்காக்களுக்குள் அழைத்துச் சென்று வர்த்தகப் புகைப்படப் படப்பிடிப்புகள் நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா, சஃபாரி வாகன உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வனவிலங்கு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியுள்ளனரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் வர்த்தகப் புகைப்படக் களங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சாதாரண சுற்றுலாப் பயணிகள் தனிப்பட்ட தேவைக்காகப் புகைப்படம் எடுப்பதற்கும், கட்டணம் அறவிட்டு வர்த்தக நோக்கில் தொழில்முறைப் படப்பிடிப்புகளை நடத்துவதற்கும் இடையில் சட்டரீதியான வேறுபாடுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில்இ இலங்கையின் வனவிலங்கு சரணாலயங்களையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதற்கு வனவிலங்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

