தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா: பதிலளித்த எடப்பாடி பழனிசாமி!
Meiveli Media Team

தமிழக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகப் பதிலளிக்காமல் சூசகமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பெருமாள்சாமியின் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய கருத்துகளுக்கு ஒரு வரையறை இருப்பதாகவும், சில விடயங்களை இப்போதைக்கு வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளியிட்ட கருத்து அவரது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அத்தகைய அரசியல் சூழல் உருவாகும்போது ஊடகவியலாளர்களை அழைத்து தெளிவான அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீர்குலைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்வதாகவும் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும், முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

