மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு: இரு சிறுநீரகங்களும் மாயம்: சுகாதார அமைச்சின் மர்ம மௌனம்
Meiveli Media Team

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவன் ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பான சர்ச்சை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பரில், சிறுவனின் பாதிக்கப்பட்ட இடது சிறுநீரகத்தை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அதன்போது ஆரோக்கியமாக இருந்த வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவச் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்தார். சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்ததாக வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமளித்திருந்த நிலையில், சத்திரசிகிச்சைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரு சிறுநீரகங்களும் தனித்தனியாக இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக பெற்றோர் தரப்பு தெரிவிக்கின்றது.
அத்துடன், அகற்றப்பட்ட சிறுநீரகங்கள் தொடர்பான மருத்துவ ஆதாரங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளிலும் முரண்பாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணைகளுக்கு சுகாதார அமைச்சு போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என மருத்துவ உரிமைகள் செயற்பாட்டாளர் வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றஞ்சாட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் அமைச்சு உள்விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இதனிடையேஇ சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் உள்ளிட்ட இரு மருத்துவர்களையும் எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என குடும்பத்தினரும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

