யாழ்ப்பாணத்தில் பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி! தலைமறைவானவரின் சொத்துக்களை முடக்க யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Meiveli Media Team

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி, பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள நபரின் சொத்துக்களை முடக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பலரிடம் தலா பல இலட்சம் ரூபாய்களைப் பெற்றுக்கொண்ட குறித்த நபர், வாக்குறுதியளித்தபடி அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் ஏமாற்றியுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் தனித்தனியாக முறைப்பாடுகளைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும், பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றம் ஏற்கனவே திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது. ஆனால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் சந்தேகநபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தலைமறைவாகியுள்ள சந்தேகநபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் சட்டரீதியாக முடக்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

