கடல் சீற்றத்தில் திசைமாறிய யாழ். மீனவர்கள்: தமிழகத்தில் பாதுகாப்பாக மீட்பு!
Meiveli Media Team

யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், கடலில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகப் படகுடன் திசைமாறிச் சென்று தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர். சோன்டின்டன் ஜெனோசன் மற்றும் டிவோசன் ஜூடா ஆகிய இரு மீனவர்களுமே இவ்வாறு தமிழகக் கரையோரத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில், வழக்கமான மீன்பிடி நடவடிக்கைக்காக நாட்டுப் படகில் குருநகரிலிருந்து கடலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது, ஆழ்கடலில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாகப் படகு கட்டுப்பாட்டை இழந்து திசைமாறியுள்ளது. நீண்ட நேரம் கடலில் தத்தளித்த நிலையில், காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட படகு, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் தமிழகத்தின் இராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பன் வடக்குக் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
தகவலறிந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் மற்றும் மண்டபம் பொலிஸார் விரைந்து சென்று இரண்டு மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தற்போது இருவரும் மண்டபம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், கடலில் ஏற்பட்ட சம்பவம் மற்றும் எல்லை தாண்டிய விவகாரம் தொடர்பில் இந்திய அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

