இலங்கை கடற்படைக்கு ஜப்பான் ஒரு பில்லியன் யென் நிதியுதவி: வலுப்பெறம் கடல்சார் பாதுகாப்பு

Meiveli Media Team


இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் ஒரு பில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியுள்ளது.
ஜப்பானின் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கை ஆவணங்கள் இன்று கொழும்பிலுள்ள நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாட்டா அகியோ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவும் கலந்துகொண்டார். இந்த நிதியுதவியின் கீழ், இலங்கை கடற்படைக்கு நவீன இறுக்கமான அடிப்பாகத்தைக் கொண்ட ஊதப்பட்ட மீட்புப் படகுகள், அதாவது RHIB ரகப் படகுகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் கடல்சார் கண்காணிப்பு, சட்ட அமுலாக்கம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட கடற்படையின் செயற்பாடுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உதவிக்காக ஜப்பான் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் வலியுறுத்தினார்.