நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புகழ்பாடல்களை உள்ளடக்கிய ‘அர்-ரபீஃ’ அரபு நூல் கொழும்பில் வெளியீடு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு: நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் புகழையும் மகத்துவத்தையும் எடுத்துரைக்கும் அரபு மொழியிலான ‘அர்-ரபீஃ’ (Ar-Rabee) நூல் வெளியீட்டு விழா, 2026 ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அஷ்-ஷெய்க் அப்துல் நாசர் ரஹ்மானி அவர்களால் எழுதப்பட்ட இந்நூல், அவரது 20ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் விரைவில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளதாக நூலாசிரியர் அறிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அஹ்சன் மரிக்கார் (LLM) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய நூலாசிரியர் அஷ்-ஷெய்க் அப்துல் நாசர் ரஹ்மானி, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள ஆழமான அன்பையும் பக்தியையும் எடுத்துரைத்தார்.
“இந்த ஒன்றுகூடல் என்னுடைய காரணத்தினால் அல்ல; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கொண்ட உண்மையான அன்பின் காரணமாகவே அனைவரும் இங்கு ஒன்றுகூடியுள்ளனர்” என அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கலீபத்துல் குலபா அஷ்-ஷாதுலி மௌலவி முஹம்மத் ஸுஹூர் பாரி, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் கலீபத்து ஷாதுலி மௌலவி ஹிஷாம் ஃபத்தாஹி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர் அஷ்-ஷெய்க் புர்ஹானுத்தீன், இலங்கை ஷரீஆ கவுன்சில் உறுப்பினர்களான மௌலவி மஸீன் மஹ்தூமி மற்றும் மௌலவி அஸ்மீர் ஹஸனி, அஜ்வாத் அல்-ஃபாஸி அரபுக் கல்லூரியின் அதிபர் கலீபத்து ஷாதுலி மௌலவி அஹமத் சூபி மஹ்லரி உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பல உலமாக்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மத்ரஸா மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இது இஸ்லாமிய பக்தி இலக்கியங்கள் மற்றும் நாத் பாடல் மரபுகள் மீதான சமூகத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
இந்நிகழ்வின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் தயாரிப்பாளருமான ஃபஸ்ஹான் நவாஸ் செயற்பட்டார்.
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதான அன்பையும் புகழையும் வெளிப்படுத்தும் இந்நூல் வெளியீடு, நூலாசிரியரின் இலக்கியப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன், இஸ்லாமிய பக்தி இலக்கிய வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்துள்ளது.

