அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்களுக்கு மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குற்றச்சாட்டு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டில் தற்பொழுது அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் பின்னணியில் மதத் தலைவர்கள் சிலர் தவறான நோக்கங்களுடன் செயற்படுவதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் (25) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த ஆட்சியில் ஊழல் மற்றும் அநியாயங்களில் ஈடுபட்டோருக்கு எதிராக முறையான நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நீதிமன்றத் தீர்ப்புகளின்படி சிறைச் செல்ல வேண்டியவர்கள், அந்தத் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், அரசாங்கத்தை மாற்றுவதற்கும் மதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.

சில மதத் தலைவர்களின் பிரச்சினைகளைப் பெரிதாக்கி, அவர்களைத் தூண்டிவிட்டு, கொழும்பில் சிறிய குழுக்களை அமைத்து அரசாங்கத்தை வீழ்த்துவதற்குச் சிலர் பகல் கனவு காண்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டு மக்களின் முழுமையான ஆதரவு தேசிய மக்கள் சக்திக்கு இருக்கும் வரை, இந்த அரசாங்கத்தை யாரும் ஒரு புள்ளியளவும் கூட நெருங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மையாகும் என்று அவர் கூறினார்.

போராட்டங்களில் ஈடுபடும் சில மதத் தலைவர்கள் இரவு நேரங்களில் எங்கு செல்கிறார்கள், எங்கெல்லாம் சென்று தங்குகிறார்கள் என்பது சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் காணொளிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்த அவர், எவற்றையும் கண்டு அஞ்சாமல் தங்களுடைய பயணமும் நோக்கமும் திட்டவட்டமாக சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாடு முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் மேலும் சுட்டிக்காட்டினார்.