நுகர்வோர் அதிகாரசபையின் அனுமதியின்றி கோதுமை மா விலை உயர்வு: நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தயார்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருளாக அறிவிக்கப்பட்டுள்ள கோதுமை மாவின் விலையானது, நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முன்னறிவித்தல் எதுவுமின்றி தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத விலை உயர்வு தொடர்பில் விரிவான விளக்கமளிக்குமாறு கோரி, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுக்கு சிறப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அத்துடன், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில், இந்த சட்டவிரோத விலை உயர்வு குறித்து நிறுவனங்களிடம் ஆராய்வதற்காக வரும் அக்டோபர் 28 ஆம் திகதி சிறப்பு கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், இத்தகைய முறையற்ற விலை உயர்த்தல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அதிகாரசபைக்கு முழு அதிகாரம் உள்ளதால், அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அக்டோபர் 28 ஆம் திகதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் நிறுவனங்கள் தமது விளக்கங்களை முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ள போதிலும், மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்திடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், தற்போதைய சூழலில் மா சார்ந்த தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தாமல் இருக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களின் இந்த சட்டவிரோத விலை அதிகரிப்புக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சட்ட ஆலோசனைகளைக் கோரியுள்ளது.

சட்ட ஆலோசனைகள் கிடைத்தவுடன், குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்டப்படி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.