செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை: அரசாங்கத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் குற்றச்சாட்டு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள 4 ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டதாகவும், உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினம் (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4 ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட உடல்களில் பெரும்பான்மையானவை உடம்புகள் இன்றிப் புதைக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்கை அழுத்தம் காரணமாக உடைகள் மற்றும் உடல்கள் கரைந்து போயிருக்கலாம் என புது விளக்கம் அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச நிபுணர்கள், செம்மணி விசாரணைக்கு போதிய நிதியும், தடயவியல் மற்றும் உடற்கூற்றியல் தொழில்நுட்ப வசதிகளும் இல்லை என்றும், சர்வதேச உதவிகள் அவசியமென்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செம்மணி விசாரணைகளை சர்வதேசப் பொறுப்புடன் முழுமையாக நடத்த அரசாங்கம் தயங்குவதாகவும், குற்றங்களைச் செய்துவிட்டு அதனை மூடிமறைக்க முற்படும் முந்தைய அரசாங்கங்களை விட இந்த அரசாங்கம் வேறுபட்டதல்ல என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களும், நீதி கோருவோரும் இந்த அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.