நாமல் ராஜபக்ஷவுக்கு தந்தை மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் இருந்து கடிதம்!
Meiveli Media Team

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி, தனது செயலாளர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவிடம் குறித்த கடிதத்தைக் கையளித்துள்ளார். பின்னர் அந்தக் கடிதம் நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறைவாசத்தையும் துயரங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தின் மீது மட்டுமே முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த கடிதத்தில், 2010ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ அரசியலில் பிரவேசிக்க விரும்பியபோது தாம் வழங்கிய அறிவுரையையும் மஹிந்த ராஜபக்ஷ நினைவுகூர்ந்துள்ளார். அரசியலுக்கு வர விரும்பினால் வரலாம்; ஆனால் சிறை செல்லவும் துயரங்களை அனுபவிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என அப்போது தாம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் மீதே தாம் நம்பிக்கை வைத்திருந்ததாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, அரசியல் காரணங்களுக்காக எதிர்த்தரப்பினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், பெற்றோர் செய்யும் செயல்களுக்காகப் பிள்ளைகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு எனவும் நாமல் ராஜபக்ஷவுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும்இ தமது குடும்பத்தினர் எதிர்கொண்டுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அரசியல் ரீதியாகத் தோல்விகளைச் சந்தித்தாலும் நாட்டு மக்களிடம் நன்றியுணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதியாக, நாமல் ராஜபக்ஷவுக்குக் கடவுளின் துணை இருக்க வேண்டும் எனத் தனது வாழ்த்தையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

