போலி கடவுச்சீட்டைப் பெற்று லண்டன் செல்லத் திட்டம் – மூன்று இலங்கையர்கள் கைது!

Meiveli Media Team


டெல்லியில் போலி கடவுச்சீட்டைப் பெற்று, அங்கிருந்து லண்டன் செல்வதற்காகச் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் நுழைந்த மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் கடற்பகுதியில் படகொன்றின் மூலம் தமிழகத்திற்குள் நுழைந்த குறித்த மூவரையும், கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்த மூவர், தரைவழியாக மன்னாரைச் சென்றடைந்துள்ளனர்.
பின்னர், மன்னாரிலிருந்து தமிழகத்திற்குச் செல்வதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த படகோட்டி ஒருவருக்கு ஜி.பி.எஸ். நேரலை இருப்பிடத் தகவலை அனுப்பியுள்ளனர்.

குறித்த தகவலின் அடிப்படையில், தமிழகத்திலிருந்து வந்த படகில் மூவரும் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை இராமேஸ்வரம் பாம்பன் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் படகு சென்றுகொண்டிருந்தபோது, கியூ பிரிவு பொலிஸார் படகைச் சுற்றிவளைத்து, அதிலிருந்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மூவரும் டெல்லிக்குச் சென்று, அங்கு நபர் ஒருவரின் உதவியுடன் கடவுச்சீட்டுகளைப் பெற்று, அதன் மூலம் லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாக தமிழகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்துஇ கைது செய்யப்பட்ட நால்வரும் கியூ பிரிவு பொலிஸாரால் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன்போது, இலங்கையிலிருந்து படகின் மூலம் தமிழகத்திற்கு வருவதற்காக ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தைச் செலுத்தியதாகக் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.