மகாசங்கத்தினரை அணிதிரட்டுவோம்: அநுர அரசுக்கு  பலாங்கொட கஸ்ஸப தேரர் எச்சரிக்கை!

Meiveli Media Team


ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படாவிட்டால், அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்படும் என பலாங்கொட கஸ்ஸப தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெகுவிரைவில் மகா சங்கத்தினரை கொழும்பில் அணிதிரட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பிக்குகளின் போராட்டத்தை வன்முறையைத் தூண்டி ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்தால், அது வெற்றியளிக்காது எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு இரண்டு தெரிவுகள் முன்வைக்கப்படுவதாகவும், ஒன்று ஜனாதிபதி பதவி விலக வேண்டும் அல்லது ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாகப் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என்பதால், இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் பலாங்கொட கஸ்ஸப தேரர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பௌத்த கலாசாரத்தை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், மகா சங்கத்தினர் இருக்கும் வரை இவ்வாறான முயற்சிகள் வெற்றியளிக்காது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படாவிட்டால், விகாரமகாதேவி பூங்காவில் இருந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் பலாங்கொட கஸ்ஸப தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.